📅 Saturday, 11 July 2026 IST | ஆனி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 11, 2026 12:34 PM

“த.வெ.க கூட்டணியில் திருமாவளவனுக்கு உடன்பாடில்லை!”

“த.வெ.க கூட்டணியில் திருமாவளவனுக்கு உடன்பாடில்லை!”

“த.வெ.க கூட்டணியில் திருமாவளவனுக்கு உடன்பாடில்லை!”

- பரந்தாமன் ‘பளிச்’ கண்டுபிடிப்பு

“முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு தடைவிதிக்க வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க தரப்பு தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனு தள்ளுபடியாகிவிட்டதே?”

“அது தள்ளுபடி கிடையாது. கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்தான சி.பி.ஐ விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே, கரூர் சம்பவம் குறித்துப் பொதுவெளியில் யாரும் பேசக் கூடாது என்று ஏற்கெனவே தடையாணை இருக்கிறது. இந்தச் சூழலில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அண்மையில் கரூர் சம்பவம் குறித்துப் பொதுவெளியில் பேசியிருந்தார். எனவே, இந்த விவகாரத்தை நீதிமன்ற அவமதிப்பு வழக்காகத் தாக்கல் செய்திருந்தோம். விசாரணையில், ‘இந்த விவகாரத்தை நீங்கள் விசாரணை கமிட்டியிலேயே முறையிடலாம்’ எனக் கூறிவிட்டது நீதிமன்றம். நாங்களும் அதை ஏற்றுக்கொண்டு வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டோம்.”

“இந்த வழக்கு விசாரணையின்போது, ‘நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்றாதீர்கள்’ எனக் கண்டித்திருக்கிறதே நீதிமன்றம்..?”

“பொதுவாக அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது, இது போன்ற கருத்துகளை நீதிமன்றங்கள் வெளிப்படுத்துவது வழக்கமானதுதான். மற்றபடி, இது ஒன்றும் நீதிமன்ற உத்தரவு கிடையாது. கடந்தகாலங்களில் சென்னை உயர் நீதிமன்றத்திலும் சில அரசியல் வழக்குகளில், ‘இந்த அமைப்பை உங்கள் அரசியல் மேடையாகப் பயன்படுத்தாதீர்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.”

“கரூர் சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையிலேயே, முதல்வர் விஜய் பெயர் குறிப்பிடப்படவில்லை எனும்போது, எந்த அடிப்படையில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தீர்கள்?”

“எஃப்.ஐ.ஆரில் பெயர் இல்லை என்பதற்காக ஒரு விஷயத்தை ஒதுக்கிவிட முடியாது. சம்பவம் குறித்து முதற்கட்டமாகப் பதிவுசெய்யப்படும் புகாரில், சம்பவத்துக்குக் காரணமான கண்ணுக்குத் தெரிந்த நபர்கள் குறித்துத்தான் பதிவுகள் செய்ய முடியும். பிறகு தொடர் விசாரணையில்தான் ‘சம்பவம் யாரால் ஏற்பட்டது, காரணியாக இருந்தது யார்?’ என்பது குறித்தெல்லாம் குற்றப்பத்திரிகையில் இடம்பெறும். எனவே, எஃப்.ஐ.ஆரில் பெயர் இல்லை என்பதற்காகவெல்லாம் மனு கொடுக்காமல் இருக்க முடியாது!”

“கரூர் சம்பவம் நடைபெற்றபோதே அன்றைய தி.மு.க அரசு, த.வெ.க தலைவர் விஜய் பெயரை எஃப்.ஐ.ஆரில் சேர்க்காமல்விட்டது தவறு என்று இப்போது உணர்கிறீர்களா?”

“உண்மைதான். காவல்துறை விதிமுறைகளை மீறி கூட்ட நெரிசல் ஏற்படக் காரணமாக இருந்த ஒரு நபர், சம்பவத்தன்றே சென்னைக்குத் தப்பிவந்த சூழலில் அவரைக் கைதுசெய்திருக்க வேண்டும். மக்களேகூட கைது நடவடிக்கையைத் தான் எதிர்பார்த்திருந்தார்கள்.”

“விஜய்யை அரசியலில் பெரிய ஆளாக்கிவிட வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கையால்தானே அன்றைய தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்கியது?”

“இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. அப்படியொரு கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந் தால் அரசியல் நோக்கர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பது ஒன்று. மற்றொன்று, ‘எந்தவொரு அரசியல் தலைவரும் தங்கள் தொண்டர்கள் பலியாவதை விரும்ப மாட்டார்கள்’ என்று அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகவே தனது எண்ண ஓட்டத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால், அந்தப் பெருந்தன்மை இன்றைய முதல்வரிடமோ, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடமோ இல்லை.”

“ `பனையூர் பாபுவை தி.மு.க-வில் சேர்த்துக் கொண்டதன் மூலம் தி.மு.க-தான் கூட்டணிக்குத் துரோகம் இழைத்துவிட்டது’ என வி.சி.க சொல்கிறதே?”

“ `த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க பங்கெடுத்துக்கொண்டதாலேயே அது கூட்டணியாகிவிடாது’ என்கிறார் திருமாவளவன். அது முரண்பாடானது. ஆனாலும்கூட கொள்கைப் பிடிப்புள்ள அவர் ஏன் அப்படிச் சொல்கிறார் என்றால், அந்தக் கூட்டணியில் அவருக்கு உடன்பாடில்லை. பொருந்தாச் சட்டையைப் போட்டுக்கொண்டதால் நெருடலாக இருக்கிறது அவருக்கு. அதற்காக அந்தச் சட்டையை அவரால் கழற்றிப்போடவும் முடியவில்லை; `இந்தச் சட்டை சரியில்லை’ என வெளிப்படையாகச் சொல்லவும் முடியவில்லை. எனவே, எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு எங்கள்மீது குற்றம்சாட்டிக்கொண்டிருக்கிறார்.

பனையூர் பாபு வி.சி.க-விலிருந்து விலகியிருந்த போது, அந்தக் கட்சிக்கும் தனக்கும் இருந்த மாறுபட்ட கருத்துகளைப் பொதுவெளியில் சொல்லி, ‘எனக்கும் வி.சி.க-வுக்கும் இனி தொடர்பில்லை’ என அறிவித்தும் விட்டார். இந்த நிலையில்தான் அவர் தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆக, வி.சி.க-விலேயே இல்லாத ஒருவர், தி.மு.க-வில் வந்து இணைந்ததை, கூட்டணிக்குத் துரோகம் என்று எப்படிச் சொல்ல முடியும்?”

“முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவுடன் முரண்பட்டு நிற்கும் நீங்கள், தி.மு.க மறுசீரமைப்புக் குழு உறுப்பினர் என்ற வகையில், சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்க கட்சித் தலைமையிடம் பரிந்துரைப்பீர்களா?”

“ஒரு கட்சியில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அது எங்கள் கட்சி சம்பந்தப்பட்டது. அதைப் பற்றி வெளியில் சொல்வதற்கு ஒன்றுமில்லை!

மறுசீரமைப்புக் குழு என்பது முழுக்க முழுக்கக் கட்சியின் வளர்ச்சிக்கானது. தனிப்பட்ட நபர்களுக்கானது அல்ல. கட்சியின் எதிர்காலக் கட்டமைப்பை வலுப்படுத்து வதற்கான அறிக்கையைத்தான் மறுசீரமைப்புக் குழு அளிக்கப்போகிறது!”