📅 Saturday, 11 July 2026 IST | ஆனி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 11, 2026 01:33 AM

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை

முதலமைச்சர் விஜய், இந்திய தேர்தல் ஆணையம், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் உள்ளிட்டோர் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published : July 10, 2026 at 6:05 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில், ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த முதலமைச்சர் விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதேபோல், அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்களான கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.

இவர்களின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டிருந்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேற்கண்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட தடை விதிக்கக்கோரி திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தேர்தல் வழக்குகளில் தங்களை வெற்றிப் பெற்றவராக அறிவிக்க வேண்டும் என வேட்பாளர்கள் கோரிக்கை முன்வைப்பதுண்டு. இடைத்தேர்தல் நடத்தி எம்எல்ஏவைத் தேர்ந்தெடுத்தபின், தேர்தல் வழக்கை தாக்கல் செய்த வேட்பாளரை வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவித்துவிட்டால், ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதி என்ற நிலை ஏற்படும் என்பதால், தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை சம்பந்தப்பட்ட தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம், 1967 முதல் 2018 ஆம் ஆண்டு வரை பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதனால் தேர்தல் வழக்குகளில் முடிவெடுக்கும் வரை இடைத்தேர்தலை அறிவிக்கக்கூடாது" என்று வாதிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் வழக்குகள் குறித்த ஆவணங்கள் இன்னும் ஆணையத்துக்கு வரப் பெறவில்லை. அதனால், இந்த வழக்கில் நிலைபாட்டைத் தெரிவிக்க இயலாது" என்று வாதிட்டார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர், தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் ராஜினாமா செய்யும்போது எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை" என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "ஜனநாயக நடைமுறையில் புனிதம் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் மனுதாரரின் அடிப்படை உரிமை குறித்த கேள்வி பொருந்தாது. தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது அரசு பணம் செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது அரசியல் சாசன பிரச்சனையை எழுப்பக்கூடும். தேர்தல் வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய வேண்டியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதலமைச்சர் விஜய், மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 31- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதுவரை, மேற்கண்ட ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எனினும், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து நீதிபதிகள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.