5 மேட்ச் ஆடியவுடன் காயம்.. ஃபிட்னஸ் இல்லாம எப்படி இவரை செலக்ட் பண்ணீங்க? சடகோபன் ரமேஷ் காட்டம்
5 மேட்ச் ஆடியவுடன் காயம்.. ஃபிட்னஸ் இல்லாம எப்படி இவரை செலக்ட் பண்ணீங்க? சடகோபன் ரமேஷ் காட்டம்
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி மோசமாக சொதப்பி தொடரை இழந்ததைத் தொடர்ந்து, பிசிசிஐ தேர்வு குழுவின் குளறுபடிகளையும், வீரர்களின் தேர்வு முறையையும் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் கடுமையாக சாடியுள்ளார். குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானாவின் தேர்வு குறித்து அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஹர்ஷித் ரானா, அதன் காரணமாக 2026 ஐபிஎல் மற்றும் 2026 டி20 உலகக் கோப்பை தொடர்களை தவறவிட்டார். அதன் பிறகு எவ்வித உள்நாட்டுப் போட்டிகளிலும் விளையாடி தனது உடற்தகுதியை நிரூபிக்காமலேயே, நேரடியாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் அவருக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டு, 4வது போட்டியில் இருந்து விலகினார். அதாவது காயத்தில் இருந்து மீண்டு வந்து ஐந்து போட்டிகள் மட்டுமே ஆடிய நிலையில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சடகோபன் ரமேஷ் தனது யூடியூப் பக்கத்தில் பேசுகையில், "அறுவை சிகிச்சைக்குப் பிறகு எங்கும் தனது உடற்தகுதியை நிரூபிக்காத ஹர்ஷித் ரானாவை எப்படி நேரடியாக இந்திய அணிக்கு தேர்வு செய்தீர்கள்? முழங்கால் அறுவை சிகிச்சையில் இருந்து முழுமையாக குணமடையாத போது, அது தொடை அல்லது தசைநார் காயங்களுக்கு வழிவகுக்கும். அவர் 100 சதவீத உடற்தகுதியுடன் அணிக்கு திரும்பவில்லை என்பது இதில் இருந்தே புரிகிறது. வெவ்வேறு வீரர்களுக்கு வெவ்வேறு அளவுகோல்களை தேர்வு குழு பயன்படுத்துகிறது என்பதற்கு இதுவே ஆதாரம்" என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹர்ஷித் ரானாவுக்கு காயம் ஏற்படுவதற்கு முன்பாகவே, ஜிம்பாப்வே தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய சடகோபன் ரமேஷ், அவரின் பணிச்சுமையை தொடர்ந்து சமாளிக்க முடியாது என்பது அணி நிர்வாகத்திற்கு முன்பே தெரிந்திருந்தது என்று கூறினார். அதே சமயம், ஹர்ஷித் ரானாவின் திறமை மீது தமக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும், அவர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் 5 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரின் தேர்வு குறித்தும் பேசிய ரமேஷ், வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டதாலும், ரவி பிஷ்னோய் மீது அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கை இல்லாததாலுமே வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார் என்றார். மான்செஸ்டரில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 60 ரன்கள் வழங்கி விக்கெட் எதுவும் எடுக்காமல் சொதப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடைசி நேரத்தில் அவர் இரண்டு நோ பால்களை வீசி இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெற வழிவகுத்தார்.