பெரம்பூரில் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!
சென்னை: முதல்வர் விஜய் தனது பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை இன்று திறந்து வைத்து, பொதுமக்களுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் பட்டாக்களை வழங்கினார். மேலும், தொகுதி சார்ந்த புகார்களை தெரிவிக்க பிரத்யேக செயலி ஒன்றையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
தேர்தல் வெற்றிக்குப் பின் 2 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக அதிகாரபூர்வமாக பெரம்பூர் தொகுதிக்கு முதல்வர் விஜய் வருகை புரிந்தார். சர்மாநகரில் புதுப்பிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர், அங்குள்ள வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை திறந்து வைத்தார். பின்னர், ரேஷன் கடையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதோடு, பெரம்பூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, தவெக நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், சாலைவலமாக நடந்து சென்று மக்களை சந்தித்தார்.
இந்தச் செயலியின் மூலம், பொதுமக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை, மின்சாரம் போன்ற குறைகளை நேரடியாகப் பதிவு செய்யலாம். மேலும், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அதன் தகுதிகள் குறித்த விவரங்களை மக்கள் எளிதில் அறிந்துக் கொள்ளவும், தங்களின் புகார்களின் தற்போதைய நிலையை போன் மூலமாகவே கண்காணித்துக் கொள்ளவும் இந்தச் செயலி வழிவகை செய்கிறது.
முதல்வர் விஜய்யின் வருகையை முன்னிட்டு, பெரம்பூர் தொகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டது. பொதுமக்கள் வசதிக்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டன. விழா நடைபெறும் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
தனது சொந்த தொகுதி மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக அமையவுள்ள இந்த விழா, பெரம்பூர் தொகுதி வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது