📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 13, 2026 07:33 PM

தொகுதி மறுவரையறை பார்ட்-2, கரூரில் கண்டித்த முதல்வர் விஜய்... மத்திய பா.ஜ.க

தொகுதி மறுவரையறை பார்ட்-2, கரூரில் கண்டித்த முதல்வர் விஜய்... மத்திய பா.ஜ.க

தொகுதி மறுவரையறை பார்ட்-2, கரூரில் கண்டித்த முதல்வர் விஜய்... மத்திய பா.ஜ.க-வின் அடுத்த ’மூவ்’கள்?!

மறுவரையறை மசோதா கொண்டுவரப்பட்டால் அதை நிறைவேற்றத் தேவையான வாக்குகளைப் பெறவும் பா.ஜ.க கடுமையாகத் திட்டம் தீட்டி வருகிறது.

``மத்திய அரசு தொகுதி மறுவரையறை செய்யப்போவதாக பேச்சு அடிபடுகிறது. அதுபோன்ற எவ்வித தொகுதி மறு வரையறையையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாது. நமக்கான இடத்தை யாரும் பறிக்கவும் முடியாது. அதை யாரும் பறிக்கவும் விடமாட்டோம்’’ - கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முழங்கியுள்ளார் முதல்வர் விஜய். இந்தப் பிரச்னையின் பின்னணி, விரிவாகப் பேசப்பட வேண்டியது.

சட்டமன்றங்கள் மற்றும் நாடாளு மன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை, அரசியல் லாபத்துக்காக தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைத்து மத்திய பா.ஜ.க அரசு கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால், 528 உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர், அதாவது 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 298 பேரே அதற்கு ஆதரவாகவும், 230 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால், மசோதா தோல்வியடைந்துள்ளது. தற்போது, ‘தொகுதி மறுவரையறை 2.0’-வை திட்டமிட்டு வருகிறது மத்திய பா.ஜ.க அரசு.

பா.ஜ.க அரசின் புது பிளான் என்ன?

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால், தங்களுக்கு பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் எனத் தென்மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. அதனாலேயே, மசோதா தோல்வி அடைந்தது. எனவே தற்போது, தென் மாநிலங்களை சமாதானப்படுத்தும் வகை யிலான திட்டங்களைத் தீட்டி வருகிறது மத்திய பா.ஜ.க அரசு. அதன்படி, `அதே 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில்தான் தொகுதி மறுவரையறை நடக்கும். ஆனால், மாநிலங்களுக்கு இடையேயான தொகுதிகளின் விகிதங்கள், 1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வரையறை செய்யப்படும்’ எனப் புதிய வரைவு மசோதாவை முன்மொழியவுள்ளதாகத் தெரிகிறது.

இது, மத்திய பா.ஜ.க அரசு தொகுதி மறுவரையறைக்கு எடுத்து வரும் பல தரப்பட்ட நடவடிக்கைகளுள் ஒன்று எனச் சொல்லப்படுகிறது. இறுதி முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை.

பிடிவாத நடவடிக்கை... நோக்கம் என்ன?

மத்திய பா.ஜ.க அரசின் இந்த மறுவரையறை பிடிவாத நடவடிக்கை, 2029 மக்களவைத் தேர்தலை நோக்கியதாக இருக்கிறது. 2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுத்தால், அது வெளிவரவே 2028-ம் ஆண்டு ஆகிவிடும். அதன் அடிப்படையில் மறுவரையறை, சட்டத்திருத்தம் போன்றவற்றை மேற்கொண்டு மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை மாற்றி அமைத்திட 2029-ம் ஆண்டும் கடந்துவிடும். எனவே, இருக்கிற பழைய தரவின் (2011 சென்சஸ்) அடிப்படையில் தொகுதி மறுவரையறையை முடித்துவிட்டால், 2029-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க-வுக்கு அதிக செல்வாக்குள்ள வடமாநிலங்களின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து, தேர்தலில் எளிதாக வெற்றி பெற்றுவிட கணக்குப்போடுகிறது.

“நாடாளுமன்றத்தில் எங்கள் வாக்கு... அரசியல் வலிமை இழந்துவிடும்!’’

நிலவி வரும் இந்தச் சூழல் குறித்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியிடம் பேசினோம். ``2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால், மத்திய அரசின் மக்கள்தொகை திட்டங்களை முறையாகப் பின்பற்றிய தென் மாநிலங்கள், பஞ்சாப், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் பாதிக்கப்படும். ஆனால், அதைப் பொருட்படுத்தாத சில வடமாநிலங்களுக்குக் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும்.

தொகுதி மறுவரையறைக்கு இரண்டு வழிகளைக் கட்டுகிறது மத்திய பா.ஜ.க அரசு. ஒன்று, மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கையை நிர்ணயிப்பது. இதனால், தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். இரண்டாவது, `மொத்த நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறோம்’ என்கிறது மத்திய பா.ஜ.க அரசு. அப்படிச் செய்தாலும், மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். ஆனால், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு, தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

விளைவு, நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாங்கள் அவையில் இடம்பெற்றாலும், மசோதா முன்மொழியப்படும்போது எங்கள் வாக்கின் அரசியல் வலிமை குறைந்துவிடும். நாளை ஒருவேளை, வடமாநிலங்களுக்கு முழுக்க சாதகமாகவும், தென்மாநிலங்கள், பஞ்சாப், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங் களுக்குப் பாதகமாகவும் ஒரு மசோதா வந்தால், வடமாநில நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டுமே அதை நிறைவேற்றப் போதுமானதாகிவிடும். நாங்கள் எதிர்த்து வாக்களித்தாலும் அதன் தாக்கம் மிகவும் குறைந்துவிடும். `1971 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை’ என்று இப்போது மத்திய பா.ஜ.க அரசால் செய்திகள் கசியவிடப் படுகின்றன. அதிலும், தென்மாநிலங்களுக்கு முழுமையான நியாயம் கிடைக்காது.

`பெண்கள் இட ஒதுக்கீடு’ - முகமூடி!

மத்திய பா.ஜ.க அரசு உண்மையிலேயே பெண்கள் மீது அக்கறை கொண்டிருந்தால், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா 2023-ம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்ட பின்னரும், அதைத் தொகுதி வரையறையுடன் இணைத்திருக்காது. அப்போது, எந்தக் கட்சியும் அதை எதிர்த்து வாக்களிக்கவில்லை. ஆனால், `சென்சஸ் முடிந்த பிறகுதான் அதை அமல்படுத்துவோம்’ என்கிறது மத்திய அரசு. சென்சஸுக்கும் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தற்போது இருக்கும் 543 லோக்சபா தொகுதிகளிலேயே 33% இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்க முடியும்.

பஞ்சாயத்துத் தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தபோது, புதிய பஞ்சாயத்துகளை உருவாக்கவில்லை. இருந்த பஞ்சாயத்துகளில்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இன்று பல மாநிலங்களில் அது 50% ஆகவும் உயர்ந்துள்ளது ஆக்கபூர்வ முன்னேற்றம். ஆனால் நாடாளுமன்ற தேர்தலிலோ, `தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால்தான் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம்’ என்று, அதை அரசியல் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறது மோடி அரசு.

``வருகிற நாடாளுமன்றக் கூட்டத்தொடர்... அசாதாரணமாக இருக்கும்!’’

ஆளும் மத்திய அரசு, எதிர்க்கட்சிகளின் எம்.பி-க்களை இணைத்துக்கொள்ளும் முயற்சிகள் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. இந்திய ஜனநாயகம் அரசியல் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டது. கட்சிகளையே கபளீகரம் செய்ய ஆரம் பித்தால், நாளை எந்தக் கட்சிக்கும் பாதுகாப்பு இருக்காது. இந்தியா தற்போது மிக நெருக்கடி யான காலகட்டத்தில் இருக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தைவிட வேறொரு விதமான சவாலை இன்று சந்தித்து வருகிறோம். அப்போது வெளிநாட்டு ஆட்சிக்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டுப் போராடியது. ஆனால் இன்று, இந்தியாவின் இறையாண்மை, அரசியல் சாசனம், ஜனநாயகத்தின் அடிப்படை ஆகியவற்றை இந்திய அரசே பலவீனப்படுத்துகிறது.

இந்த மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அரசியல் சாசனத்தை யும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் உறுதியுடன் அதனை எதிர்கொள்ளத் தயாராக உள்ளன. ஒருவேளை, தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் நாடாளு மன்றத்தில் முன்மொழியப்பட்டால், அதை மிகவும் கடுமையுடன் எதிர்கொள்வோம். நாட்டையும், அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும், தமிழ்நாட்டின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்’’ என்று விரிவாகப் பேசினார் ஜோதிமணி.

தொகுதி மறுவரையறை 2.0... விஷயத்தில் என்ன செய்யப்போகிறது மத்திய பா.ஜ.க அரசு? முதல்வர் விஜய் கரூரில் இதுகுறித்து கண்டித்துள்ள நிலையில், த.வெ.க அரசு மத்திய அரசின் ‘மூவ்’களை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?