வியட்நாம் படகு விபத்து: இன்று இரவே தாயகம் கொண்டு வரப்படும் 15 இந்தியர்களின் உடல்கள்
வியட்நாம் படகு விபத்து: இன்று இரவே தாயகம் கொண்டு வரப்படும் 15 இந்தியர்களின் உடல்கள்
உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் இன்று இரவு தாயகம் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Published : July 13, 2026 at 8:17 PM IST
ஹனோய்: நாட்டையே உலுக்கிய வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்களின் உடல்களை இன்று இரவே தாயகம் கொண்டு வரப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "படகு விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள், ஹோ சி மின் (வியட்நாம்) நகரில் இருந்து மும்பைக்கு வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த விமானம், மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையத்துக்கு இரவு 9.35 மணிக்கு சென்று சேரும்.
உயிரிழந்தவர்களின் உடல்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 15 பேரில் 10 பேர் தமிழர்கள் ஆவர். 3 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். 2 பேர் (பெண்கள்) கேரளாவை சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பை தாங்கும் சக்தியை கொடுக்குமாறு இறைவனை வேண்டிக் கொள்கிறோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களின் உடல்களுக்காக விமான நிலையங்களில் பெரும் சோகத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நெஞ்சை உலுக்கிய சோகம்
வியட்நாம் நாட்டில் உள்ள மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே கடந்த 11-ம் தேதி அதிவேக சுற்றுலா படகு ஒன்று சென்றது.
அதில் 32 இந்திய சுற்றுலா பயணிகள் பயணித்தனர். அப்போது ஹோன் மே அருகே அந்த படகு சென்ற போது, திடீரென படகு கவிழ்ந்தது. பலத்த சூறைக்காற்று வீசியதன் காரணமாக படகு கவிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கோர விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். அவர்களில் ஒருவர் மட்டும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 14 பேருக்கு சிகிச்சைக்கு பிறகு இந்தியா அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழகத்தை சேர்ந்த 10 பேரின் உடல்களை அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு வரும் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக சேலம் டிஐஜி சந்தோஷ் ஹதிமானி, தமிழக அரசின் சார்பில் வியட்நாமுக்கு சில தினங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.