📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 13, 2026 09:33 PM

“வைபவ் சூர்யவன்ஷி பில்டப்பை பார்த்து அவசரப்பட்டுட்டோம்.. சாம்சனுக்கு தானே..” வாசிம் ஜாஃபர் விமர்சனம்

“வைபவ் சூர்யவன்ஷி பில்டப்பை பார்த்து அவசரப்பட்டுட்டோம்.. சாம்சனுக்கு தானே..” வாசிம் ஜாஃபர் விமர்சனம்

“வைபவ் சூர்யவன்ஷி பில்டப்பை பார்த்து அவசரப்பட்டுட்டோம்.. சாம்சனுக்கு தானே..” வாசிம் ஜாஃபர் விமர்சனம்

மும்பை: 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அவசரப்பட்டு இந்திய அணிக்குள் கொண்டு வந்துவிட்டோம், ஊடகங்களின் அதீத பில்டப் மற்றும் ரசிகர்களின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகளுக்குக் கட்டுப்பட்டு அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்து விட்டது என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் விமர்சனம் செய்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசிப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டு, சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. சூர்யவன்ஷி தான் விளையாடிய 3 போட்டிகளில் முறையே 14, 13, 15 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய வாசிம் ஜாஃபர், "அணி நிர்வாகம் வைபவ் சூர்யவன்ஷியை மிக அவசரமாக அறிமுகம் செய்துவிட்டது என்று நினைக்கிறேன். அவரைப் பற்றிய ஊடக விளம்பரங்களும், பில்டப்புகளும், அவர் விளையாட்டை பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் உணர்ச்சிவசப்பட்ட எதிர்பார்ப்புகளுமே இதற்கு காரணம். நான் ஏற்கனவே கூறியது போல, சஞ்சு சாம்சனைத் தான் அணியில் தொடர்ந்து விளையாட வைத்திருந்திருக்க வேண்டும். வைபவ் இன்னும் இளமையாக இருப்பதால், அவர் அணியுடன் பயணித்து வெளியில் இருந்தே ஆட்டத்தை உன்னிப்பாகக் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய ஜாஃபர், "வைபவ் சூர்யவன்ஷிக்கு 3 போட்டிகள் வாய்ப்பளித்துவிட்டு, கடைசிப் போட்டியில் மீண்டும் சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்தீர்கள். ஆனால், அடுத்ததாக நடைபெற உள்ள ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார். இது எனக்கு மிகவும் விசித்திரமாகத் தெரிகிறது.

சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக ஒரே ஒரு வடிவிலான கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகிறார். அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். அவர் அடுத்த டி20 உலகக் கோப்பைக்கான திட்டங்களில் நிச்சயம் இருப்பார். ஆனால், அணி நிர்வாகம் அவரை நடத்திய விதம் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது" என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சனுக்கு இனி இந்திய டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மறுபுறம் வைபவ் சூர்யவன்ஷி ஜிம்பாப்வே தொடரிலும் ரன் குவிக்கவில்லை என்றால் பல ஆண்டுகளுக்கு அவருக்கு சர்வதேச போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்ற நிலையும் உள்ளது.