’MS தோனி to ராகுல் டிராவிட்..’ அடுத்த சிஎஸ்கே பயிற்சியாளராக வாய்ப்புள்ள 5 பேர்!
’MS தோனி to ராகுல் டிராவிட்..’ அடுத்த சிஎஸ்கே பயிற்சியாளராக வாய்ப்புள்ள 5 பேர்!
சிஎஸ்கே அணியின் தொடர்ச்சியான தோல்விகள், சேப்பாக்கம் கோட்டையில் கூட வெற்றி பெற முடியாத நிலை, ஸ்டீஃபன் பிளெமிங் 17 ஆண்டுகள் கழித்து விலகிய முடிவு ஆகியவை சேர்ந்து அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளன. ராகுல் டிராவிட், ஹேமங் பதானி, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், மகேந்திர சிங் தோனி ஆகிய 5 பேரும் இந்தப் பதவிக்கான முக்கிய நபர்கள் என பேசப்படுகிறது.
2023ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் 5வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதற்கடுத்த 3 ஐபிஎல் சீசன்களாக பிளேஆஃப் சுற்றுக்கே தகுதிபெறவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் 2024 ஐபிஎல் சீசனில் 5வது இடத்தை பிடித்த சென்னை அணி, 2025-ல் படுமோசமாக விளையாடி 10வது இடத்தில் முடித்தது.
இந்தசூழலில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கம்பேக் கொடுக்கும் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஸ் மாத்ரே, சர்பராஸ் கான், உர்வில் பட்டேல், ஷிவம் துபே போன்ற வீரர்கள் இருந்தும் 8வது இடத்தில் தான் முடித்தது.
அதுமட்டுமில்லாமல் சென்னை அணியின் கோட்டையாக கருதப்பட்ட சேப்பாக்கத்தில் கூட சிஎஸ்கே அணியால் கன்சிஸ்ட்டண்ட்டாக வெல்ல முடியவில்லை. அதற்கு அணித்தரப்பில் ஏலத்திலும், போட்டியின்போதும் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளே காரணம் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் தான் 17 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுவந்த நியூசிலாந்தின் ஸ்டீஃபன் பிளெமிங் தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தசூழலில் ஐபிஎல்லில் பெரிய லெகஸியை வைத்திருக்கும் சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தப்பதவிக்கான பட்டியலில் ராகுல் டிராவிட், ஹேமங் பதானி, தினேஷ் கார்த்திக் போன்ற கிரிக்கெட்டர்களுக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சிஎஸ்கே கோச்சாக வாய்ப்புள்ள 5 பேர்..
5. ஹேமங் பதானி
முன்னாள் இந்திய வீரரான ஹேமங் பதானி, பயிற்சியாளராக செல்லும் இடமெல்லாம் கோப்பை வென்று சம்பவம் செய்துவருகிறார். இதுவரை டிஎன்பிஎல்லில் 4 கோப்பைகள், லங்கா பிரீமியர் லீக்கில் 3 கோப்பைகள், SA20 லீக், ILT20 லீக்கில் கோப்பைகள் என 9 பிரான்சைஸ் கோப்பைகளை வென்று அசத்தியுள்ளார்.
நடப்பாண்டு ஸ்டீபன் பிளெமிங் குறித்து பதானி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அந்த வீடியோ ஐபிஎல்லில் இந்தியர்கள் கோச்சாக வேண்டும் என்று அவர் வெளிப்படையாக பேசியிருந்தார். வீரர்களை பற்றி புரிந்துகொள்ளவும், ஆடுகளங்களை சரியாக கையாளவும் இந்திய கோச் தான் சரியாக இருக்கும் என்ற கருத்தை கூறியிருந்தார்.
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்கு கோச்சாக செயல்பட்ட அவர், தற்போது அங்கு ஃபிரான்சைஸ் ஓனர்கள் மாற்றத்தால் அடுத்த 2 ஆண்டுக்கு காத்திருப்பில் இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக அவருடைய பெயரும் தற்போது அடிபட ஆரம்பித்து உள்ளது.
4. தினேஷ் கார்த்திக்
சர்வதேச கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனியின் இருப்பால் அதிக வாய்ப்புகளை பெறாத தினேஷ் கார்த்திக், தன்னுடைய பேட்டிங் கோச் அவதாரத்தில் ஆர்சிபி அணிக்கு அடுத்தடுத்து 2 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். மேலும் ஆர்சிபி அணியின் ஆலோசகராகவும் செயல்படும் அவர், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணியின் பேட்டிங் அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றியுள்ளார்.
எப்போதும் சிஎஸ்கே அணியாக விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்ததாக கூறியிருக்கும் தினேஷ் கார்த்திக், சிஎஸ்கே அணிக்காக பயிற்சியாளர் பொறுப்பை பெற்றால் அவருடைய நோக்கம் கோப்பை வெல்லவேண்டும் என்ற ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் தலைசிறந்த பயிற்சியாளராக கருதப்படும் ஆண்டி ஃப்ளவரிடம் நீண்ட காலமாகப் பயிற்சி பெற்று வருவதால், வேறு அணிக்கு பதவி உயர்வு பெறுவதற்கு தினேஷ் கார்த்திக் தகுதியானவர் என்றே பார்க்கப்படுகிறது.
3.ரவிச்சந்திரன் அஸ்வின்
சென்னையை சொந்தமண்ணாக கொண்டவரான ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸால் கண்டறியப்பட்டு இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவானாக உயர்ந்தவர். எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் நெருக்கமான உறவை கொண்டிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கேவின் தேர்வாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அஸ்வின் ஒரு எதிர்பாராத தேர்வாக இருப்பார் என்றாலும், சொந்த மண்ணில் அதிகப்போட்டிகளில் விளையாடும் ஐபிஎல் தொடரில் அஸ்வினைப் பரிசீலிப்பதில் தவறில்லை. அவர் ஐபிஎல்லில் கேப்டனாக இருந்துள்ளார், அதேநேரம் ஃபிரான்சைஸ் கிரிக்கெட் குறித்து நவீன கண்ணோட்டம் கொண்டவர், ஒரு உண்மையான சிஎஸ்கே ஜாம்பவான்.
தன்னுடைய அடுத்த பயணம் குறித்து ஒருமுறை பேசியிருந்த அஸ்வின், "எனது தொழில் வாழ்க்கையில், வெறும் வீரராக இருப்பதைத் தாண்டி இன்னும் அதிகமாகப் பங்களிக்க விரும்புகிறேன்" என்று ETPL வீரர் ஏலத்திற்குப் பிறகு அவர் கூறினார்.
மேலும் "கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநில கிரிக்கெட்டில் நான் பயிற்சியாளர் மற்றும் கேப்டனாக இருந்து வருகிறேன். நான் அந்தப் பணியைச் செய்வதை ராகுல் டிராவிட் பார்த்தார், என்னால் அதைச் செய்ய முடியும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். இது நான் அடுத்து செய்ய விரும்பும் ஒரு புதிய முயற்சிக்கு பெரிய இணைப்பாக பார்க்கிறேன்" என்று கூறியிருந்தார்.
2. ராகுல் டிராவிட்
கடந்த ஆண்டே சிஎஸ்கே அணியுடன் தொடர்புபடுத்தி ராகுல் டிராவிட்டின் பெயர் அடிபட்டன, ஆனால் அவர் பயிற்சியாளராக மாறுவாரா என்ற உறுதியை வெளிப்படுத்தவில்லை. இந்தசூழலில் தற்போது அதற்கான சரியான சூழல் அமைந்திருப்பதாகவே பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் ஒரு மிகப்பெரிய பெயர், ஐபிஎல் அனுபவம் வாய்ந்தவர், மேலும் டி20 உலகக் கோப்பையை வென்ற பயிற்சியாளர் ஆவார். இளம் வீரர்களிடமிருந்து திறமையை வெளிக்கொண்டு வருவதில் தலைசிறந்தவர், இந்தியாவின் யு19 அணி கட்டமைப்பில் வலுவான வீரர்களை உருவாக்கிய பெருமைக்குறியவர்.
ராகுல் டிராவிட்டிடன் நீண்ட அனுபவம் இருந்தபோதிலும், நவீன கிரிக்கெட்டின் அடுத்தடுத்த நகர்வுக்கான நுட்பங்களையும் கண்டறிபவர். அதை இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்ற தருணத்தை வைத்தே நம்மால் சொல்லிவிட முடியும். மேலும் பல ஆண்டுகளாக மிகவும் நிதானமான முறையில் செயல்பட்டு வரும் சிஎஸ்கே அணிக்கு, ஸ்டீபன் பிளெமிங்கிற்கு பிறகு ராகுல் டிராவிட் சரியான தேர்வாக இருக்கலாம்.
1. மகேந்திர சிங் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனியை விட சிறந்த தேர்வு உண்டா? அவரைப் பற்றி சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. தோனி என்றால் சிஎஸ்கே, சிஎஸ்கே என்றால் தோனி. இந்த இந்திய ஜாம்பவான் பல ஆண்டுகளாகவே சென்னை அணியில் ஒரு பயிற்சியாளரைப் போன்றுதான் செயல்பட்டுள்ளார். அதை இப்போது முறைப்படுத்துவது மிகவும் சரியானதாக இருக்கும். தன்னுடைய உடற்தகுதி மோசமடைந்துவருவதை 2026 ஐபிஎல் சீசன் தொடக்க சிஎஸ்கே விழாவில் பேசியிருந்த தோனி, பயிற்சியாளராக தன்னுடைய புதிய அத்தியாயத்தை தொடங்கும் சரியான நேரத்தில் இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. தோனி சென்னை சூப்பர் கிங்ஸின் பயிற்சியாளராக வந்தால் அதைவிட கொண்டாட்டமான செய்தி சிஎஸ்கே ரசிகர்களுக்கு இல்லை..