📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil July 14, 2026 03:30 AM

தாய்மொழிகளின் கருத்தரங்கு 2026: முன்பதிவு ஆரம்பம்

தாய்மொழிகளின் கருத்தரங்கு 2026: முன்பதிவு ஆரம்பம்

இவ்வாண்டின் தாய்மொழிகளின் கருத்தரங்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கல்வி அமைச்சும் மூன்று தாய்மொழிக் கற்றல், வளர்ச்சி குழுக்களும் இணைந்து 14வது முறையாக நடத்தும் அக்கருத்தரங்கு, காலை 10 மணியிலிருந்து இரவு 8.30 மணிவரை நடைபெறும். முதல் முறையாகச் சிங்கப்பூர் எக்ஸ்போ மண்­ட­பம் ‘2பி’யில் அக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

பெற்றோரும் பிள்ளைகளும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவும் கலந்துரையாடல்களிலும் பயிலரங்குகளிலும் தங்களின் இடங்களை உறுதிசெய்யவும் திங்கட்கிழமை (ஜூலை 13) முதல் முன்பதிவு செய்யலாம்.

‘களிப்பூட்டும் கண்டுபிடுப்புக்கான பூந்தோட்டம் (A Garden for Joyful Discovery)’ எனும் கருப்பொருளைக் கொண்டு இவ்வாண்டின் கருத்தரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் தங்கள் தாய்மொழியின் சிறப்பை உணர்வதற்கேற்ற துடிப்பான கற்றல் சூழலை ஏற்படுத்தித் தருவதே அதன் நோக்கம்.

கல்வியாளர்களும் ஊடகப் பிரபலங்களும் தங்களின் ஆலோசனைகளை வழங்கும் விதத்தில், 42 கலந்துரையாடல்களும் பயிலரங்குகளும் நடைபெறவுள்ளன. பள்ளிகளும் சமூகப் பங்காளர்களும் வழங்கும் 41 காட்சிக் கூடங்களும் இடம்பெறவுள்ளன.

பிள்ளைகள் அன்றாட வாழ்க்கையில் தாய்மொழியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதை அக்கருத்தரங்கு ஊக்குவிக்கிறது.

தமிழ்மொழிக்கென ஐந்து கலந்துரையாடல்களும் ஐந்து பயிலரங்குகளும் நடைபெறவுள்ளன.

பிற்பகல் 3.45 மணிக்கு, மீடியாகார்ப் ஒலி 968 பிரபலம் நித்தியா ராவ், கதைகள், இசை, கலாசார அனுபவங்கள் மூலம் வீட்டில் தமிழை எவ்வாறு துடிப்புடன் வைத்திருக்கலாம் என்ற தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

நிகழ்ச்சியின் முதல் தமிழ்ப் பயிலரங்காக, நண்பகல் 12 மணிக்கு உள்ளூர்க் கலைஞரும் இயக்குநருமான கார்த்திகேயன் சோமசுந்தரம் வழங்கும் ‘மகிழ்வு தரும் தமிழ்ப் பேச்சு!’ இடம்பெறவுள்ளது.

பிற்பகல் 2.30 மணிக்கு ஏகேடி கிரியே‌‌ஷன்ஸ் அமைப்பின் இயக்குநர் ராணி கண்ணா வழங்கும் ‘வில்லும் பாட்டும் கதைகளும்: ஒரு வில்லுப்பாட்டு அனுபவம்’ என்ற பயிலரங்கு நடைபெறும்.

கூடுதல் விவரங்களை அறியவும் பயிலரங்குகளுக்கு முன்பதிவு செய்யவும் https://mtls.moe.edu.sg/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

கருத்தரங்கின் சமூக ஊடகப் பக்கங்களைப் பின்பற்றி புதிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.