📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 14, 2026 05:31 AM

பெரம்பூரில் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்

பெரம்பூரில் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்

பெரம்பூரில் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்

பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த 50 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி, புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

Published : July 13, 2026 at 9:45 PM IST

Updated : July 13, 2026 at 10:21 PM IST

சென்னை: பெரம்பூரில் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், தனது தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது பெரம்பூர் தொகுதிக்கு முதல் முறையாக விஜய் இன்று (ஜூலை 13) வருகை தந்தார். பின்னர், தொகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து, தொகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார்.

அத்துடன், தொகுதி மக்களின் மனுக்கள், கோரிக்கைகள் மற்றும் புகார்களை நேரடியாக பதிவு செய்து, அவற்றின் நடவடிக்கை நிலையை கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மக்கள் சேவை தளம் என்ற செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.

மேலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை திறந்து வைத்து அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் அரசு சான்றிதழ்களை ஒரே இடத்தில் பெறும் வகையில் இந்த மையம் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இ-சேவை மையத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

அத்துடன், வியாசர்பாடியில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மின்சார பேருந்து பணிமனையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் வசதிகளை பார்வையிட்ட அவர், ஒரு பேருந்தை முழுமையாக சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?, ஒரு முறை சார்ஜ் செய்தால் எத்தனை கிலோமீட்டர் இயக்க முடியும்? போன்ற விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்து முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.