📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil July 12, 2026 04:10 PM

ஜூலை 13, 14ல் தேசிய விளையாட்டரங்கம் அருகில் ஆயுதப்படை பயிற்சி

ஜூலை 13, 14ல் தேசிய விளையாட்டரங்கம் அருகில் ஆயுதப்படை பயிற்சி

த காலாங் எனப்படும் தேசிய விளையாட்டரங்க வளாகம், காலாங் வேவ் மால் கடைத்தொகுதி, ஓல்டு காலாங் ஏர்போர்ட் வட்டாரம் ஆகிய இடங்களில் ஜூலை 13, 14ஆம் தேதிகளில் ராணுவப் பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

எனவே, அவ்விரண்டு நாள்களிலும் அங்கு பொதுமக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்படும் என்று சிங்கப்பூர் ஆயுதப்படை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) பொதுமக்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறிப்பிடப்பட்ட நாள்களில் ராணுவப் பயிற்சி நடைபெறும் இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சாலைப் போக்குவரத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை என்ற ஆயுதப்படை, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பயிற்சி நடைபெறும் இடங்களில் திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிவரை தடுப்புகள் எழுப்பப்படும் என்று விளக்கியது.

ராணுவப் பயிற்சியில் ராணுவ அதிகாரிகளுடன் வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா வானூர்தி ஆகியவை பயன்படுத்தப்படும் என்று ஆயுதப்படை தெரிவித்தது.

அப்பகுதிகளில் அதிகமான ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பெருத்த சத்தங்கள் கேட்கும் என்பதையும் அது குறிப்பிட்டது. ஹெலிகாப்டர் பறப்பதும் போலி வெடிகுண்டுகள், வெடிபொருள்கள், தோட்டாக்கள் பயன்படுத்தப்படுவதும் பேரொலி எழுவதற்கான காரணங்கள்.