சொத்து பிரச்சினை: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் சமரச தீர்வு மையத்தில் ஆஜர்
சென்னை: சொத்துப் பிரச்சினையில் சகோதரரை தாக்கிய வழக்கு தொடர்பாக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜரானார்.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி மரிய வில்சனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் மரிய வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குடும்ப பிரச்சினையாக இருப்பதால் சமரச தீர்வு மையத்தில் தீர்வு காண அறிவுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில், அமைச்சர் மரிய வில்சன், அவரது தந்தை, சகோதரர், சகோதரரின் மனைவி ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
அதன்படி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் அமைச்சர் மரிய வில்சன் அவரது வழக்கறிஞர் ஹாஜா மொய்தீன் கிஸ்தியுடன் ஆஜரானார். அவரது சகோதரர் உள்ளிட்ட பிறரும் வழக்கறிஞர்களுடன் ஆஜராகினர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சமரச பேச்சுவார்த்தை நிறைவடையாததால், விசாரணை ஜூலை 21-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்டோர் மீண்டும் ஆஜராக உத்தவிடப்பட்டுள்ளது.