📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 13, 2026 10:34 PM

சென்னையில் பள்ளி மாணவர்களுக்காக நாளை முதல் 41 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னையில் பள்ளி மாணவர்களுக்காக நாளை முதல் 41 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பேருந்து வசதி வேண்டி கோரிக்கை

சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ம.அருள் பிரகாசம் சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள 2 அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பேருந்து வசதி வேண்டி கடந்த 30.06.2026 அன்று போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கடந்த 10 நாட்களாக சைதாப்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில், பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்களை கொண்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், அப்பகுதிகளைச் சார்ந்த மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

முதல்-அமைச்சர் உத்தரவு

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் உத்தரவின்படி, பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலின்றி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வசதியாக, மாணவர்களை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அழைத்து சென்றுவர ஏதுவாக, ஏற்கனவே சென்னையில் உள்ள 25 பள்ளிகளுக்கு 25 பேருந்துகள் மூலம் 50 பயண நடைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நாளொன்றுக்கு 41 சிறப்பு பேருந்துகள் வாயிலாக 84 பயண நடைகள் 13.07.2026 திங்கட்கிழமை அன்று முதல் இயக்கப்படவுள்ளது. அப்பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் இன்று (11.07.2026) பார்வையிட்டார், உடன் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த. மோகன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.