முதல்வரின் பதிலுரை மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது: எஸ்டிபிஐ தலைவர் விமர்சனம்
முதல்வரின் பதிலுரை மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது: எஸ்டிபிஐ தலைவர் விமர்சனம்
சென்னை: எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:தமிழக சட்டமன்றப் பேரவையில் இன்று (நேற்று) நடைபெற்ற காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், முதல்வரின் பதிலுரையும், அதனை தொடர்ந்து அவையில் அரங்கேறிய நிகழ்வுகளும் நீண்டகால சட்டமன்ற மரபுகளுக்கும் ஆரோக்கியமான நடைமுறைகளுக்கும் உகந்ததாக அமையவில்லை என்பது வருத்தமளிக்கிறது. மக்கள் பிரச்னைகளுக்கான ஆக்கப்பூர்வமான தீர்வுகளை விடுத்து, கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சிகள் மீது அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மட்டுமே விவாதம் திசைதிருப்பப்பட்டது. இப்பதிலுரை மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி, அவற்றையே ஆதாரங்கள் என ஆளும் தரப்பு அவையில் பேசியது எந்த வகையிலும் ஏற்புடையதோ சரியான நடைமுறையோ அல்ல. அதேவேளையில், முதல்வரின் பதிலுரைக்குப்பின் எதிர்க்கட்சிகள் பதிலுரை குறித்து துணை வினாக்கள் எழுப்புவதற்கு முன்பே அனுமதி மறுக்கப்பட்டதும், அனைவரையும் சமமாக வழிநடத்த வேண்டிய சபாநாயகரின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கையும் ஜனநாயகப் படுகொலையாகும். இத்தகைய மரபுமீறல்களை கைவிட்டு, எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை மதித்து, மக்கள் நலன் சார்ந்த விவாதங்களை முழுமையான அவை மாண்போடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.