ரூ.30 கோடி ஆன்லைன் நிதி மோசடி திண்டுக்கல் நீதிமன்றத்தில் தம்பதி சரண்
திண்டுக்கல்: ரூ.30 கோடி ஆன்லைன் நிதி மோசடியில் முக்கிய முகவர்களாக செயல்பட்ட தம்பதி நேற்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
மதுரை மாவட்டம் மேலுார் அருகே செயல்பட்டு வந்த எப்.கியூ.எல்., நிதி நிறுவனம் ஆன்லைன் டிரேடிங் செயலி வழியாக பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் எனகூறி முகவர்களையும் நியமித்தது.
இதை நம்பி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் முதலீடு செய்தனர். சமீபத்தில் நிதி நிறுவனம் மூடப்பட்டது. ரூ.30 கோடி வரை பண மோசடி நடந்தது தெரிந்தது.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காசம்பட்டியை சேர்ந்த முகவர்களான ரமேஷ் 33, அவரது மனைவி அனிதா 28, உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முக்கிய முகவர்களாக செயல்பட்ட மதுரை மாவட்டம் மேலுார் பகுதியை சேர்ந்த தம்பதி ரஞ்சித் 29, பிரியதர்ஷினி 23, திண்டுக்கல் இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி தினேஷ்குமார் உத்தரவிட்டார்.
இருவரும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.