இஷான் கிஷான் இரட்டை சதம்: கிழக்கு மண்டலம் 708 ரன் விளாசல்
சென்னை: துலீப் டிராபி பைனலில், கேப்டன் இஷான் கிஷான் 270 ரன் விளாச, கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 708 ரன் குவித்தது.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் துலீப் டிராபி கிரிக்கெட் பைனலில் (5 நாள் போட்டி), கிழக்கு, தெற்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் கிழக்கு மண்டல அணி 385/4 ரன் எடுத்திருந்தது. இஷான் கிஷான் (111), குமார் குஷாக்ரா (63) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் கிழக்கு மண்டல அணியின் குமார் குஷாக்ரா, 128 பந்தில் சதத்தை எட்டினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு இஷான்-குஷாக்ரா 230 ரன் சேர்த்தனர். குஷாக்ரா, 101 ரன்னில் (5X6, 8X4) அவுட்டானார். இஷான் கிஷான், தேவ்தத் படிக்கல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, முதல் தர போட்டியில் தனது 2வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இவர், 250 ரன்னில் 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆனார்.
அனுகுல் ராய் (45), முகமது ஷமி (28), முகமது குரேஷி (40) ஓரளவு கைகொடுத்தனர். மீண்டும் களமிறங்கிய இஷான் கிஷான், 270 ரன்னில் (7X6, 30X4) ஆட்டமிழந்தார். ஆட்டநேர முடிவில் கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 708 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தெற்கு மண்டலம் சார்பில் திரிபுரணா விஜய் 4, மிலிந்து, ஷ்ரேயாஸ் கோபால் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
'சூப்பர் கீப்பர்'
கிழக்கு மண்டல அணி கேப்டன் இஷான் கிஷான் (270 ரன்), துலீப் டிராபி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் விளாசிய விக்கெட் கீப்பர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதற்கு முன், 2014ல் மொகாலியில் நடந்த வடக்கு மண்டல அணிக்கு எதிரான போட்டியில், மத்திய மண்டல அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் நமன் ஓஜா, 217 ரன் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.