கோழிப்பண்ணை மூலம் மாதந்தோறும் வருமானம்... விவசாயி தங்கவேலின் வெற்றி ரகசியம்!
கோழிப்பண்ணை மூலம் மாதந்தோறும் வருமானம்... விவசாயி தங்கவேலின் வெற்றி ரகசியம்!
குறைந்த முதலீட்டில் கோழிப்பண்ணை அமைத்து, நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தால் 40 நாட்களுக்கு ஒருமுறை நிலையான வருமானம் பெறலாம் என விவசாயி தங்கவேல் தெரிவித்துள்ளார்.
“ என்பெயர் கோழிப்பண்ணை தங்கவேல்'. 1 எனக்கு இந்த அடைமொழியும் நிரந்தர வருமானமும் வருவதற்கு இந்தக் கோழி பண்ணைதான் காரணம். "முட்டைக்கோழியை விட கறிக்கோழி வளர்ப்பதுதான் ஈஸி. அதில்தான் வருமானம் பார்க்க முடியும். 20 வருடங்களுக்கு முன்பு முதலீடு செய்தேன். இன்று வரை 40 நாட்களுக்கு ஒரு முறை நிரந்தர வருமானம் பார்த்து வருகிறேன். அந்தக் காலத்தில் நான் முதலீடு செய்தது குறைவு. இப்போதைய காலத்தில் 15 லட்சம் முதலீடு செய்தால் 2000 கோழிகள் வளர்க்கும் வகையில் செட் போட்டு பண்ணை அமைத்து, செலவெல்லாம் போக 40 நாளில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கலாம்.
கையில் 5 லட்சம் ரூபாய் இருந்தால் போதும், வங்கியில் 10 லட்சம் ரூபாய் லோன் வாங்கி வாழ்க்கையை சிறப்பாக்கி, வருங்காலத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடலாம். இல்லையேல், கையில் இருக்கும் குறைந்த முதலீடான 5 லட்சம் முதலீடு செய்தால், கோழிப்பண்ணை அமைத்து, 700 முதல் 900 கோழிகள் வளர்த்து 40 நாட்களுக்கு ஒரு முறை 15,000 ரூபாய் வருமானம் பார்க்கலாம். கையில் 2 லட்சம் ரூபாயும், ஒரு ஏக்கர் நிலமும் இருந்தால் மீதி 3 லட்சம் ரூபாய் வங்கியில் லோன் போட்டு சிறிய பண்ணை ஆரம்பிக்கலாம்.
பராமரிப்பு பணிகளை நாமே செய்து கூலிக்கு ஆள் விடாமல் இருந்தால் 40 நாளில் 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம். கோழிப் பண்ணையில் நான் மனநிறைவானவருமானம் பார்த்து வருகிறேன்” இப்படி மகிழ்ச்சியோடு முன்னுரை வழங்கி நம்மை உற்றுப் பார்த்தார், தங்கவேல். கரூரிலிருந்து பழனி செல்லும் வழியில் வேலம்பாடி கிராமத்தில் தங்கவேலின் தோட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைக்கு நாம் நேரில் சென்ற போதுதான் மேற்கண்டவாறே மிகுந்த நெகிழ்ச்சியுடன் பேசிய தங்கவேல், வரக்காபி கொடுத்து நம்மை உபசரித்தார். அவர் முன்பு சில கேள்விகளை நாம் வைத்தோம்... கோழிப் பண்ணை அமைப்பது பற்றி விரிவாக சொல்ல ஆரம்பித்தார்.
கோழிப்பண்ணை தொழிலில் வருமானம் உறுதியாகக் கிடைக்குமா?
"கோழிப்பண்ணை அமைப்பது பெரிதல்ல அதை முறையாகப் பராமரித்து, கோழிகளை வளர்த்து வருமானம் பார்க்க வேண்டும். கோழி வளர்ப்பில் பண்ணைக் கோழிகள் வளர்த்தால் மட்டுமே நிரந்தர வருமானம் பார்க்க முடியும், அதுவும் கோழிப்பண்ணை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு குஞ்சுகளை மொத்தமாக வாங்கி 40 நாட்களில் கோழியாக வளர்த்து, கொடுத்து ஈசியாக மொத்தமாக பணம் பார்க்கலாம்."
கோழி வளர்ப்பில் உள்ள செலவினங்கள், விற்பனை முறை குறித்து விரிவாகக் கூற முடியுமா?
"நாமே குஞ்சு வாங்கி கோழி வளர்த்து நாமே கறிக்கடைக்கு மார்க்கெட்டிங் செய்தால் பல நேரங்களில் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி வரும். குஞ்சின் விலை 15 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை வாங்கலாம். ஒரு கோழி 40 நாட்களில் 3 கிலோ தீவனம் சாப்பிட்டால் தான் இரண்டு முதல் இரண்டரை கிலோ வரை எடை கிடைக்கும்.3 கிலோ தீவனம் 100 ரூபாய், கோழி பராமரிப்பு செலவு, மருந்து ஊசி போடும் செலவு என கணக்கு பார்த்தால் 40 நாள் கழித்து ஒரு கிலோ கோழியே அசல் விலை 100 ரூபாய் வந்துவிடும். கோழிகளை அன்றைய கறிக்கோழி மார்க்கெட் விலைக்கு விற்கும்போது மார்க்கெட் விலை குறைவாக இருந்தால் நமக்கு நஷ்டம் ஏற்படும். அது மட்டுமல்ல 2000 கோழிகளுக்கு குறைவாக வளர்க்க முடியாது அப்படி 2000 கோழிகளை வளர்த்து அவற்றை நாமே விற்பதாக இருந்தால் நிச்சயம் விற்க முடியாது. பெரிய நஷ்டம் ஏற்படும். அதனால் தான் கோழி கம்பெனிகளிடம் ஒப்பந்தம் போட்டு மொத்தமாக கோழிகள் வளர்த்து அவர்களிடமே கொடுத்து வருமானம் பார்த்து வருகிறேன்."
கோழிப்பண்ணை அமைக்கும் முறை குறித்துக் கூறுங்களேன்?
"20 ஆண்டுகளுக்கு முன்பு நான் கோழிப்பண்ணை போடும்போது, செட் அமைக்கும் செலவு குறைவாக இருந்தது. இப்போது 2000 கோழிகள் வளர்க்கும் செட் அமைக்க 15 லட்சம் ரூபாய் செலவாகும். தொழிற்சாலைகளிலோ குடியிருப்புப் பகுதிகளிலோ பண்ணை அமைக்க முடியாது. கோழிப்பண்ணைக்கு நல்ல சாலை வசதி இருக்க வேண்டும். தண்ணீர், மின்சாரம் வசதி நன்றாக இருக்க வேண்டும். நல்ல மேட்டுப்பகுதியில் செட் போட்டால்தான் மழை பெய்தால்கூட தண்ணீர் தேங்காது. செட் அகலம் 25 அடி முதல் 25 அடி உள்ளவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் காற்றோட்டமாக இருக்கும். மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் போட்டால்தான் அதன் மேல் தென்னங்கீற்றுகளை போட்டு கூலிங்காக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். செட்டு கிழக்கு மேற்காக நீளமாக இருந்தால்தான், வெயில் கோழிகளைத் தாக்காது. தென் வடக்காக செட் அமைத்தால் வெயில் கோழிகளைத் தாக்கும்.
லைட் வெளிச்சம் ஆறு அடியிலிருந்து ஏழு அடி உயரத்தில் இருக்க வேண்டும். எலி, பாம்புகள் போன்றவை உள்ளே நுழையாதபடி செட்டில் ஓட்டை இருக்கக் கூடாது. இவை எல்லாம் செய்து முடிக்க மொத்தம் 15 லட்சம் ரூபாய் தேவைப்படும். விவசாயிகளுக்கு கோழிப்பண்ணை அமைக்க மானியத்தில் வங்கியில் கடன் கொடுக்கிறார்கள். கொஞ்சம் கையில் முதலீடு இருந்தால் மீதி பணத்திற்கு வங்கியில் கடன் வாங்கி கோழிப் பண்ணை அமைத்து வரும் வருமானத்தில் பாதி அளவு வங்கியில் கடனைக் கட்டும்போது சில ஆண்டுகளில் கோழிப் பண்ணை நமக்குச் சொந்தமாக மாறிவிடும்."
கோழிகள் விற்பனைக்கு என்ன செய்ய வேண்டும்?
*கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கோழிப்பண்ணை அமைத்ததும் பல்லடம் உடுமலைப்பேட்டை போன்ற பகுதியில் உள்ள கறிக்கோழி பண்ணை அலுவலகம் சென்று, நாம் கோழிப் பண்ணை அமைத்துள்ளதைப் பற்றிச் சொன்னால் அந்த நிறுவனங்களில் இருந்து சூப்பர்வைசர்கள் வந்து நம் தோட்டத்தைப் பார்த்து கோழிப்பண்ணையையும் பார்த்து ஓகே சொல்லுவார்கள். பிறகு ஒப்பந்தம் போட்ட பிறகு கோழிக்குஞ்சுகளைப் பாதுகாப்பாக டெம்போவில் கொண்டு வருவார்கள். அதை நாம் வாங்கி செட்டுக்குள் விட்டு நடுவில், பானையில் நெருப்பு கங்குகளை போட்டு வைக்க வேண்டும்.
முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் ஹீட் இல்லை என்றால் குஞ்சு இறந்து விடும். அதனால் தான் பானையில் ஹீட் வைக்க வேண்டும். ஒரு வாரம் நெருப்பு ஹிட்டில் இருந்தால் பிறகு தேவையில்லை. பத்தாவது நாளில் ஒவ்வொரு கோழியின் கண்ணிலும் ஒரு சொட்டு மருந்து ஊற்ற வேண்டும். 40 நாளில் இரண்டு முறை மருந்து ஊற்ற வேண்டும். தண்ணீரும் தீவனமும் எப்போதும் செட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு கோழி சோர்ந்து போய் இருந்தாலும் இறந்துக் கிடந்தாலோ உடனே அதை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையேல் அனைத்துக் கோழிகளுக்கும் இது பரவும். குஞ்சு, மருந்து, தீவனம் என அனைத்துமே கம்பெனியில் இருந்து கொடுத்து விடுவார்கள்."
கோழிகள் எப்போது விற்பனைக்குத் தயாராகும்?
"பத்து நாட்களுக்கு ஒரு முறை கம்பெனியில் இருந்து சூப்பர்வைசர்கள் வந்து கோழிகளைப் பார்த்து செல்வார்கள் சரியாக 40 நாளில் ஒரு கோழி ரெண்டு முதல் இரண்டரை கிலோ வெயிட் வந்து விடும். மொத்தமாக வெயிட் போட்டு கிலோவுக்கு அன்றைய கறிக்கோழி உயிர்க்கோழி மார்க்கெட் ரேட்டுக்கு ஏற்ப நம் அக்கவுன்ட்டில் பணம் போடுவார்கள். இன்றைய நிலையில் 2000 கோழி வளர்த்தால் தண்ணீர் மின்சாரம் கழிவுகளை எடுத்தல், சீட்டுக்காக அடுப்புக் கறி வாங்குதல் பராமரிக்கும் ஆள் செலவு போக 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஆள் இல்லாமல் நாமே பராமரித்தால் ஆட்களுக்கு கொடுக்கும் கூலி பத்தாயிரம் நமக்கு கூடுதலாக கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலம் இருந்தால், போரில் தண்ணீர் இருந்தால், ஒரே ஒரு முறை முதலீடு செய்து வாழ்நாள் முழுவதும் வருமானம் பார்க்க கோழிப்பண்ணை தொழில் மிகச் சிறந்தது."
கோழிக்கறிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தங்கவேல் போல எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ விரும்புவோர் கோழிப்பண்ணை தொழிலில் தாராளமாக ஈடுபடலாம்.