பரந்துார் விமான நிலைய விவகாரம்: டில்லி செல்லும் தமிழக அதிகாரிகள்
சென்னை: பரந்துார் விமான நிலையம் தொடர்பாக, டில்லியில் உள்ள விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளை, தமிழக அரசு அதிகாரிகள் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் விமான நிலையம் அமைவது தொடர்பாக, பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன. சில நாட்களுக்கு முன், மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பரந்துார் விமான நிலைய விவகாரத்தில், முதல்வர் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
'சில அதிகாரிகளுடன் பேசியபோது, பரந்துாரில் ஓடுபாதை அமைக்க முடியாது என தெரிவித்தனர்' என்றார். இது, விமான போக்குவரத்து வல்லுனர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, டில்லியில் உள்ள மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளை சந்திக்க, தமிழக அரசு அதிகாரிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை, தமிழக அதிகாரிகள் நேரில் சந்தித்து, மாற்று தொழில்நுட்பங்கள் குறித்தும், ஓடுபாதை அமைப்பில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும், மாற்று இடம் தேர்வு செய்வது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இச்சந்திப்புக்கு பின், மத்திய அரசு தெரிவிக்கும் கருத்துக்கேற்ப, அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக, தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில், பரந்துார் விமான நிலைய திட்டத்தை முடக்கும் முயற்சியில், த.வெ.க., அரசு இறங்கி உள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகத்தின் விரிவான ஆய்வுகளுக்கு பின், முறைப்படி அனுமதி பெற்ற ஒரு திட்டத்திற்கு, 'ஓடுபாதை அமைக்க முடியாது' என, அமைச்சர் நிர்மல் குமார் கூறுவது, அப்பட்டமான பொய். - நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்