📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 10, 2026 06:33 PM

சென்னை, புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை, புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் தொழிலதிபர் குளோபல் மார்க்கெட்டிங் உரிமையாளர் நசீர் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வீட்டில் 6 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆஸ்மி என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள ஆஸ்மி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

இதைபோன்று புதுக்கோட்டையில் தொழில் அதிபர்கள் 3 பேர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் திமுக நிர்வாகி செல்லையாவின் மகன் திருக்குமரன். இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். அதேபோன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இறால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ், இவரது வீட்டில் ஏழு பேர் கொண்ட இரண்டு அமலாக்கத்துறை குழுக்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று கோட்டைப்பட்டினம் பயாஸ் என்பவர் திருச்சியில் டிராவல்ஸ் ஏஜென்சியை வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டிலும் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று புதுக்கோட்டை பெருங்களூர் சேர்ந்த பாக்யராஜ். இவர் எண்ணெய் ஆலை நடத்தி வருகிறார். இவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். மூன்று இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் உதவியோடு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.