ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் காமேனியின் உடல் நல்லடக்கம்
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் காமேனியின் உடல் நல்லடக்கம் - லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி காமேனியின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Published : July 10, 2026 at 11:08 AM IST
மஷ்ஹத்: அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனியின் உடல் நான்கு மாதங்களுக்கு பிறகு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இரண்டு நாட்களாக மீண்டும் அமெரிக்கா ஈரான் இடையே தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் கூடி அலி காமேனியின் உடலுக்கு இறுதி அஞ்சல் செலுத்தினர்.
ஈரானின் தேசிய கொடியால் போர்த்தப்பட்டிருந்த அவரின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி கடந்த 6 நாட்களாக இறுதி அஞ்சலுக்காக பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. நிறைவாக நேற்று ஈரானின் கிழக்கில் உள்ள அவரின் சொந்த நகரமான மஷ்ஹத்திற்கு வந்தடைந்த அவரின் உடல் முக்கிய புனித தலமான இமாம் ரெசா தர்ஹாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவருடன் சேர்ந்து, அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த அவரின் குடும்பத்தினரின் உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டன. இமாம் ரெசா தர்ஹாவின் வெளியே கருப்பு உடையில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் அவருக்கு இறுதி மரியாதையை செலுத்தினர். மக்கள் வெள்ளத்தில் அவரின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி உள்ளே எடுத்து செல்லும் போது, அதனை கண்ணீருடன் தொட்டு பிராத்தனை செய்தனர்.
காமேனியின் உறுதி ஊர்வலம் கடந்த ஜூலை 4 ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஈரான் மற்றும் ஈராக்கின் முக்கிய நகரங்கள் வழியாக இறுதியாக மஷ்ஹத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவரின் இந்த இறுதி பயணத்தில் அவருடைய குடும்பத்தினர், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், தலைமை நீதிபதி குலாம்ஹொசைன் மொஹ்சேனி எஜெய் மற்றும் காமெனியின் மூத்த மகன் முஸ்தபா காமெனி ஆகியோர் உடனிருந்தனர்.
இருப்பினும், தற்போதைய உச்ச தலைவரும், காமேனியின் மகனுமான மொஜ்தபா காமேனி இறுதி சடங்கில் பங்கேற்கவில்லை. அமெரிக்காவின் தாக்குதலில் அவர் காயமடைந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரை பொதுவெளியில் அவர் காணப்படவில்லை.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி மற்றும் அவரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இவர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்த உச்ச தலைவராக அவரின் மகன் மொஜ்தபா காமேனி தேர்வு செய்யப்பட்டார்.
ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், மறைந்த அலி காமேனியின் உடல் நல்லடக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் 2 நாட்களாக தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.