பெரிய வெங்காயம் விலை திடீர் உயர்வு; இல்லத்தரசிகள் அதிர்ச்சி
சென்னை: இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாகப் பெரிய வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.10 வரை திடீரென உயர்ந்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான பெரிய வெங்காயம் பெரும்பாலும் மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தே கொண்டு வரப்படுகிறது.
தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை கொட்டித் தீர்த்து வருவதால், அங்கு வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து பெருமளவில் குறையத் தொடங்கியுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக நாளொன்றுக்கு மகாராஷ்டிர மாநிலம் நாசிக், புனே, சோலாப்பூர் ஆகிய இடங்களிலிருந்து 60 முதல் 65 லாரிகளில் வெங்காயம் வரும். ஆனால், மழை காரணமாகத் தற்போது 30 முதல் 35 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த வரத்துக் குறைவு குறித்து கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் முத்துக்குமார் கூறுகையில், “கடந்த சில நாட்களாகக் கோயம்பேடு சந்தையில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்கப்பட்டு வந்த பெரிய வெங்காயம், தற்போது கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்து ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.
“வெளிச்சந்தையில் இதன் விலை இதைவிடக் கூடுதலாக உள்ளது.
“வழக்கமாக தென்மேற்குப் பருவமழை காலத்தில் இதுபோன்ற விலை உயர்வு இயல்புதான் என்றாலும், வரும் நாள்களிலும் வரத்துக் குறைந்தால் கோயம்பேடு சந்தையிலேயே வெங்காயம் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை உயர வாய்ப்புள்ளது,” என்றார்.
தக்காளி, பிற காய்கறிகள் விலை நிலவரம்
வெங்காய விலை ஏறுமுகத்தில் இருக்கும் அதே வேளையில், தக்காளியின் வரத்து அதிகரித்துக் காணப்படுவதால் அதன் விலை கட்டுக்குள் உள்ளது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
சந்தையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரையிலும் விற்கப்படுகிறது. இதுதவிர, மற்ற பிற காய்கறிகளின் விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதுமின்றி வழக்கமான விலையிலேயே விற்பனை நீடித்து வருகிறது.