IND vs ENG: டாஸ் போடும் நேரத்தில் மைதானத்திற்கு வராத இந்திய அணி.. 5வது டி20 தாமதமாக தொடக்கம்!
IND vs ENG: டாஸ் போடும் நேரத்தில் மைதானத்திற்கு வராத இந்திய அணி.. 5வது டி20 தாமதமாக தொடக்கம்!
சவுதாம்ப்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியின் டாஸ் போடுவதில் எதிர்பாராத விதத்தில் தாமதம் ஏற்பட்டது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி சவுதாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 6:30 மணி அளவில் இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டு, இரவு 7:00 மணிக்கு போட்டி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு வரும் வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து சிக்கிக் கொண்டது. இதன் காரணமாக வீரர்கள் உரிய நேரத்திற்கு மைதானத்திற்கு வந்து சேர முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு கேப்டன்களும் பங்கேற்கும் டாஸ் போடும் நிகழ்வு தற்காலிகமாக தள்ளி வைப்பதாக மைதான அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இந்திய அணியின் பேருந்து மாலை 6.40 மணிக்கு மைதானத்திற்கு வந்து சேர்ந்தது. பின்னர் இரவு 7.15 மணிக்கு டாஸ் நிகழ்வு நடைபெறும் எனவும், 7.30 மணிக்கு போட்டி துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
பின்னர் டாஸ் நிகழ்வில் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்றார். அதில் டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தார். வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் மீண்டும் அணிக்கு திரும்பினார். ஏற்கனவே இந்திய அணி 0-3 என தொடரை இழந்துள்ள நிலையில், இந்த கடைசி போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.