📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 28, 2026 06:03 AM

தேர்தல் ஆணைய விவகாரம்; ஆதாயம் தேடும் எதிர்க்கட்சிகள்!

தேர்தல் ஆணைய விவகாரம்; ஆதாயம் தேடும் எதிர்க்கட்சிகள்!

தலைமை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, சமீபத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகள், அரசியல் கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. அதனால், 'தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்' என, சில கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவருக்கு எதிராக போராட்டங்களையும் அறிவித்துள்ளன. கடந்த, 15 மாதங்களாக, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி சட்டவிரோதமானது என்றும் விமர்சிக்கின்றன.

தலைமை தேர்தல் ஆணையத்தில், பல சர்ச்சைக்குரிய முடிவுகள் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் எடுக்கப்பட்டதாகவும், மற்ற தேர்தல் ஆணையர்களை கலந்து ஆலோசிக்காமல், தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன.

அதாவது, கடந்த 10 மாத காலத்தில், தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி போன்றோர், தலைமை தேர்தல் ஆணையரின் முடிவுக்கு எதிராக குறைந்தது, 14 முறை அதிகாரப்பூர்வமாக மாறுபட்ட கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அவற்றில், நான்கு கருத்துக்கள் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில், 'தேர்தல் ஆணையம் பல உறுப்பினர்களை கொண்ட அமைப்பு என்பதால், விவாதங்களின் போது மாறுபட்ட கருத்துக்கள் எழுவது இயல்பானதே.

'இருப்பினும், தேர்தல் ஆணையத்தால் பிறப்பிக்கப்படும் அனைத்து உத்தரவுகளும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் சட்டம் - 2023ன் கீழ், முழு சட்டப்பூர்வ அதிகாரத்துடனேயே பிறப்பிக்கப்படுகின்றன' என்று தெரிவித்துள்ளது.

கடந்த, 1993க்கு முன்பு வரை, தேர்தல் ஆணையம் ஒரு நபர் ஆணையமாகவே செயல்பட்டது. 1993ல் தான், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் என, மூன்று உறுப்பினர்கள் கொண்ட ஆணையமாக மாற்றப்பட்டது.

அப்போதும், தலைமை தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷனுக்கும், தேர்தல் ஆணையர்கள் எம்.எஸ்.கில் மற்றும் ஜி.வி.ஜி.கிருஷ்ண மூர்த்தி ஆகியோருக்கும் இடையே மோதல் நிலவியது.

உண்மையில், அந்த இரு தேர்தல் ஆணையர்களின் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சேஷன் வழக்கு தொடர்ந்தார்; ஆனால், நீதிமன்றம் அந்த நியமனத்தை உறுதி செய்ததுடன், மூன்று உறுப்பினர்களும் சமமான அந்தஸ்தை கொண்டிருப்பர் என்றும் தீர்ப்பளித்தது. அதாவது, கொள்கை முடிவு எடுப்பதில் மூன்று தேர்தல் ஆணையர்களுக்கும் சமமான அதிகாரம் உள்ளது என்பதை தெளிவுபடுத்தியது.

இதன்பின், 2009 ஜனவரியில், தலைமை தேர்தல் ஆணையராக இருந்த என்.கோபால சுவாமி, அரசியல் நடுநிலை இன்மையை காரணம் காட்டி, தேர்தல் ஆணையராக இருந்த நவீன் சாவ்லாவை, அப்பதவியிலிருந்து நீக்கும்படி, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்.

ஆனாலும், சாவ்லாவுக்கு எதிராக ஜனாதிபதி மாளிகை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி, அப்போது நடந்த காங்., கூட்டணி ஆட்சியில் தலைமை தேர்தல் ஆணையராகவும் சாவ்லா நியமிக்கப்பட்டார்.

கடந்த 2019ல், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய பா.ஜ., தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக, நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார்கள் மீது ஆணையம் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் குற்றமற்றவர்கள் என்று சான்றளித்தது.

அப்போது, மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் பெரும்பான்மை அடிப்படையில் இந்த முடிவை எடுத்த போது, மற்றொரு தேர்தல் ஆணையரான அசோக் லவாசா, மாறுபட்ட கருத்தை பதிவு செய்துள்ளார்.

இவற்றை எல்லாம் பார்க்கும் போது, தேர்தல் ஆணையத்தின் பெரும்பாலான உத்தரவுகள், ஆணையர்களின் ஒருமித்த கருத்து அல்லது பெரும்பான்மை முடிவு என்ற அடிப்படையிலேயே இதுவரை பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.

எந்த ஒரு நிறுவனத்திலும் நடைபெறும் ஆலோசனைகளின் போது, மாறுபட்ட கருத்துக்களும், ஆட்சேபங்களும் வெளிப்படுவது இயல்பானதே. அதுபோலவே, தேர்தல் ஆணையர்களும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி, ஆதாயம் தேட முற்படுவது சரியானதல்ல.