தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும்
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் - மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
"முதலமைச்சரின் பிரசாரத்திற்குப் பிறகு மதுராந்தகத்தில் தவெகவின் வெற்றி உறுதியாகி விட்டது. மிக விரைவில் முதலமைச்சர் தாராபுரத்திற்கும் செல்ல உள்ளார்" என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
Published : September 27, 2026 at 10:27 PM IST
சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் குறித்து பேசினார்.
அப்போது, "மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் பிரசாரத்திற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுராந்தகத்தில் அமைச்சர் விஸ்வநாதன் தலைமையிலான குழுவும், தாராபுரத்தில் அமைச்சர் ராஜேஷ்குமார் தலைமையிலான குழுவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. மதுராந்தகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷ்ணுபிரசாத், சுதா ஆகியோரும், தாராபுரத்தில் ஜோதிமணி, கிறிஸ்டோபர் திலக் ஆகியோரும் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது. முதலமைச்சரின் பிரசாரத்திற்குப் பிறகு மதுராந்தகத்தில் வெற்றி உறுதியாகியுள்ளது. மிக விரைவில் முதலமைச்சர் தாராபுரத்திற்கும் செல்ல உள்ளார். மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணி தலைவர்களின் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன" என்றார்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசிய மாணிக்கம் தாகூர், "தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எவ்வளவு பெரிய பணக்காரராகவோ அல்லது அதிகாரம் படைத்தவராகவோ இருந்தாலும் சட்டத்திற்கு முன்னால் அனைவரும் ஒன்றுதான் என்ற நிலையை முதலமைச்சர் நிரூபித்துள்ளார்.
காவல் துறை எந்தவித பாகுபாடுமின்றி செயல்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. யார் காலத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது என்பது முக்கியமல்ல. யார் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதே முக்கியம்" என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிரசாரப் பேச்சுகள் தொடர்பான கேள்விக்கு, "உதயநிதியின் பேச்சில் ஆபாச நதி பாய்கிறது. அது சட்டமன்றத்திலும் தஞ்சாவூரிலும் பாய்ந்த நிலையில் தற்போது தாராபுரத்திற்கும், மதுராந்தகத்திற்கும் வந்துள்ளது. இத்தகைய கீழ்த்தரமான பேச்சுகளை, தமிழக மக்கள் குறிப்பாக தாய்மார்களும் சகோதரிகளும் புறக்கணிப்பார்கள். திமுக, மக்களிடமிருந்து வெகுதூரம் தள்ளிப்போவதை அவர்கள் உணர்கிறார்களா என்பது தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குறித்து பேசிய மாணிக்கம் தாகூர், "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அடியாள் போல செயல்படும் தலைமை தேர்தல் ஆணையர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. இதனை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள 1,012 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் முன்பாக காங்கிரஸ் சார்பில் ஒரே கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் அமித்ஷா கூட்டணி நாட்டின் ஜனநாயகத்தைச் சூறையாடி தேர்தல் ஆணையத்தையே தங்கள் கையில் எடுத்துள்ளது.
கூட்டணி கொள்கையைப் பொறுத்தவரை, கோட்சே, சாவர்க்கர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அமித்ஷாவுக்கு எதிரான கொள்கையை காங்கிரஸ் கட்சி கொண்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரைப் பொறுத்தவரை பாஜகவை கொள்கை எதிரியாகவும், திமுகவை அரசியல் எதிரியாகவும் பார்க்கிறார். டெல்லியில் பாஜக எப்படி இருக்கிறதோ, அதேபோல தமிழகத்தில் திமுக உள்ளது என்ற அடிப்படையில் இரண்டையும் ஒப்பிட்டு பேசி வருகிறார்.
கூட்டணி அமைக்கும்போதே மதச்சார்பற்ற சமூக நீதி என்ற கொள்கைகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய் தெளிவாக இருந்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்பான விவகாரத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். திமுகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக முயன்றபோது, எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவின் எம்எல்ஏக்கள் திமுகவுடன் செல்ல விரும்பவில்லை. இது கொள்கைப் பிரச்சனையே தவிர குதிரை பேரம் அல்ல" என்று தெரிவித்தார்.