கோலி, சுப்மன், குல்தீப் கொண்டாட்டம்: இந்திய அணிக்கு எளிதான வெற்றி
திருவனந்தபுரம்: முதல் ஒருநாள் போட்டியில் கோலி (139*), சுப்மன் கில் (110), குல்தீப் (4 விக்.,) அசத்த, இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடந்தது.
நமன் அறிமுகம்: இந்திய அணியில் 'ஸ்பின் ஆல்-ரவுண்டர்' நமன் திர், 26, அறிமுகமானார். சிராஜ், ஜெய்ஸ்வால் இடம் பெறவில்லை. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
கிரிவ்ஸ் சதம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜஸ்டின் கிரிவ்ஸ், ஜான் கேம்பல் வலுவான அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 135 ரன் சேர்த்த நிலையில், குல்தீப் யாதவ் வலையில் கேம்பல் (62) சிக்கினார். பின் இந்திய பவுலர்கள் பிடியை இறுக்க, வெஸ்ட் இண்டீஸ் 'மிடில் ஆர்டர்' தகர்ந்தது. கார்டி (13) நிலைக்கவில்லை. குல்தீப் பந்தில் ஷாய் ஹோப் (12) அவுட்டானார். தனிநபராக அசத்திய கிரிவ்ஸ், ஒருநாள் அரங்கில் முதல் சதம் அடித்தார். தொடர்ந்து மிரட்டிய குல்தீப் ஓவரில் (36வது) கிரிவ்ஸ் (101 ரன், 12x4), ஜுவல் ஆன்ட்ரூ (0) வரிசையாக நடையை கட்டினர். அடுத்து வந்த ராஸ்டன் சேஸ் தடுத்து ஆட, குல்தீப் 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. 30 ஓவரில் 176/1 என இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 36 ஓவரில் 198/5 ரன் என தவித்தது.
கடைசி கட்டத்தில் ராஸ்டன் சேஸ், அமிர் ஜங்கூ விரைவாக ரன் சேர்த்தனர். பிரசித் 'வேகத்தில்' சேஸ் (24) போல்டானார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 295/7 ரன் எடுத்தது. ஜங்கூ (58 ரன், 7x4, 1x6), குடகேஷ் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் குல்தீப், 4 விக்கெட் வீழ்த்தினார்.
நல்ல துவக்கம்: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, கேப்டன் சுப்மன் கில் கலக்கல் துவக்கம் தந்தனர். ஜேடன் சீல்ஸ் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார் ரோகித். மறுபக்கம் கீமோ பால் கைநழுவ, 11 ரன்னில் கண்டம் தப்பிய சுப்மன் அதிரடியாக ஆடினார். அல்ஜாரி ஜோசப் பந்தில் ரோகித் (32, 2x4, 3x6) அவுட்டானார்.
'சூப்பர்' ஜோடி: பின் 'கிங்' கோலி, சுப்மன் சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிதறடித்தனர். அல்ஜாரி ஜோப் ஓவரில் (29வது) 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த கோலி, ஒருநாள் அரங்கில் 15,000 ரன்னை கடந்தார். ஜேடன் சீல்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய சுப்மன் கில், ஒருநாள் அரங்கில் 10வது சதம் அடித்தார். கால் தசை பிடிப்பால் அவதிப்பட்ட சுப்மன், 110 ரன்னுக்கு (13x4, 1x6), சேஸ் பந்தில் வெளியேறினார். குடகேஷ் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட கோலி, ஒருநாள் அரங்கில் 55வது சதம் அடித்தார். இது சர்வதேச கிரிக்கெட்டில் இவரது 86வது சதம். கார்டி ஓவரில் வரிசையாக இரு இமாலய சிக்சர் அடித்த 'சேஸ் மாஸ்டர்' கோலி, விரைவான வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 41.4 ஓவரில் 300/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கோலி (139 ரன், 10X4, 9X6), ருதுராஜ் (13) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை குல்திீப் கைப்பற்றினார்.
பஞ்சாப் நாயகன் நமன் திர்
ஹரியானாவில் பிறந்த இவர், உள்ளூரில் பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார். சமீபத்திய ஷெர்-இ-பஞ்சாப் டி-20 லீக் தொடரில் அமிர்தசரஸ் சூர்மாஸ் அணிக்காக பங்கேற்ற இவர், 10 போட்டியில் 655 ரன் (ஸ்டிரைக் ரேட் 217.6), 7 விக்கெட் சாய்த்தார். மொஹாலி கிங்ஸ் அணிக்கு எதிராக 64 பந்தில் 173 ரன் விளாசினார். இதன் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பு தேடி வந்தது.
நமன் திர் கூறுகையில்,''இந்திய அணியில் என் பெயரை பார்த்ததும், 10 நிமிடங்களுக்கு நம்பவே முடியவில்லை. என் தந்தையை அழைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். எனது கனவு நனவானது,''என்றார்.
15,000 ரன், 55 சதம்
ஒருநாள் போட்டி வரலாற்றில், 15,000 ரன்னை எட்டிய இரண்டாவது வீரரானார் இந்தியாவின் கோலி. இதுவரை 315 போட்டியில் 15,080 ரன் எடுத்துள்ளார். முதலிடத்தில் சச்சின் (18,426 ரன், 463 போட்டி) உள்ளார். ஒட்டுமொத்தமாக அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் இருவரும் முதல் இரு இடங்களில் நீடிக்கின்றனர். மூன்றாவது இடத்தில் சங்ககரா (இலங்கை, 404 போட்டி, 14,234 ரன்) உள்ளார்.
* அதிவேகமாக 15,000 ரன் எட்டினார் கோலி (303 இன்னிங்ஸ்). சச்சினுக்கு 377 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. இம்மைல்கல்லை 15,950 பந்தில் எட்டினார் கோலி. சச்சினுக்கு 17,528 பந்து தேவைப்பட்டது. * சச்சின், 34 வயது 66 நாள்; கோலி, 37 வயது, 326 நாளில் 15,000 ரன் எட்டினர்.
* ஒருநாள் அரங்கில் நேற்று 55வது சதம் அடித்தார் கோலி. அதிக சதம் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த இடத்தில் சச்சின் (49) உள்ளார்.
* வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக அதிக ஒருநாள் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் கோலி (44 போட்டி). அடுத்த இடத்தில் அசார் (43), கபில் தேவ் (42) உள்ளனர்.
குல்தீப் 4 விக்.,
நான்கு விக்கெட் சாய்த்த குல்தீப், ஒருநாள் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் 9வது இடம் பிடித்தார். 122 போட்டியில் 198 விக்கெட் கைப்பற்றியுள்ளார். முதலிடத்தில் கும்ளே (269 போட்டி, 334 விக்.,) உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் துவக்க ஜோடி பட்டியலில் கிரிவ்ஸ்-கேம்பல் (135 ரன், 2026) 3வது இடம் பெற்றனர். முதல் இரு இடத்தில் கிரீனிட்ஜ்-சிம்மன்ஸ் (164 ரன், 1988), கிரீனிட்ஜ்-ஹெய்ன்ஸ் (149 ரன், 1983) உள்ளனர்.
'சீனியர்' வீரர்