தவெக எம்எல்ஏவிடம் பேரம்: சிங்கப்பூர் வர்த்தகருக்கு ‘லுக்
சென்னை: தவெக ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தொடரப்பட்ட வழக்கில் மூளையாகச் செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் வர்த்தகர் லட்சுமண பெருமாளுக்கு எதிராக சென்னை காவல்துறையினர் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
சட்டப்பேரவையில் பேரவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை ஆதரிக்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ. இளையராஜா புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து சென்னை அரும்பாக்கத்தைச் சே;ந்த திருநாவுக்கரசு, திருச்சி நரேஷ், மேடவாக்கம் தியாகராஜன் ஆகியோர் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ராஜசேகர், சேதுராஜன் ஆகிய மேலும் இருவர் கைதாகியுள்ளனர். அவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கைதானவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது அவர்களில் ஒருசிலர் அளித்த தகவலின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரை விசாரிக்க காவல்துறை அழைப்பாணை அனுப்பிய நிலையில், இருவரும் உயர் நீதிமன்றத்தில் முன்பிணை பெற்றனர்.
கைதான ஒன்பது பேரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பேசியில் வந்த அழைப்புகளையும் அதிகாரிகள் ஆராய்ந்தனர்.
அப்போது, கைதானவர்களில் ஒருவர் சிங்கப்பூரைச் சேர்ந்த லட்சுமண பெருமாள் என்னும் வர்த்தகருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
லட்சுமண பெருமாள் சென்னை வந்து இவர்களை சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. எல்எல்ஏவுக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில்அவ்ரகள் அனைவரும் தங்கி ரகசிய ஆலோசனைகள் நடத்தியதும் தெரிய வந்தது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இதையடுத்து, லட்சுமண பெருமாள் குறித்து காவல்துறையின் தனிப்படையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதுபற்றி அறிந்ததும் லட்சுமண பெருமாள் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.
மேலும், சிங்கப்பூரில் இருந்தபடியே தொழில்நுட்ப உதவியுடன் சென்னை ஹோட்டலின் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் வழக்குக்குத் தொடர்புடைய சில மின்னிலக்க ஆதாரங்களை அழிக்க அவர் முயன்றதாக விசாரணை அதிகாரிகள் கூறினர்.
அதனால் லட்சுமண பெருமாள் இந்தியாவில் இருந்தால் வெளிநாடுகளுக்கு மேலும் தப்பிச் செல்லாமல் தடுக்கவும் இந்தியாவுக்குள் நுழைந்தால் உடனடியாகக் கைது செய்யவும் சென்னை காவல்துறையினர் அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட் நோட்டீஸ்’ பிறப்பித்துள்ளனர்.
அத்துடன், அவரது கைப்பேசிப் பயன்பாடு மற்றும் இருப்பிடத்தை இணையக் குற்றத் தடுப்புக் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.