தமிழ் எம்.எல்.ஏ., இல்லை எஸ்.டி.குமார் வேதனை
பெங்களூரு: ''கர்நாடகாவில் ஒரு தமிழ் எம்.எல்.ஏ., கூட இல்லையே,'' என, திருவள்ளுவர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் வேதனை தெரிவித்தார்.
பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் சார்பில், ஸ்ரீராமபுரம் லிட்டில் பிளவர் பள்ளி அரங்கில், மைசூரு திவான்களாக இருந்த தமிழர்கள் சர் சி.வி.ரங்காசார்லு, சர் கே.சேஷாத்திரி ஐயர், சர் டி.ஆர்.ஏ. தம்பு ஷெட்டி, வி.பி.மாதவ ராவ், டி.ஆனந்த ராவ், ஆற்காடு ராமசாமி முதலியார் ஆகிய ஆறு பேரின் புகைப்படங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
புகைப்படங்களை திறந்து வைத்து, காந்திநகர் காங்கிரஸ் எம்.எல்ஏ., தினேஷ் குண்டுராவ், பெங்களூரு திருவள்ளுவர் சங்க தலைவர் எஸ்.டி.குமார், பெங்களூரு மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
எஸ்.டி.குமார் பேசுகையில், மைசூரு திவான்களாக இருந்த ஆறு தமிழர்களும் செய்த பல முக்கிய பணிகள், சாதனைகளை எடுத்துரைத்தார். மைசூரு மஹாராஜாக்களுக்கே திவான்கள் ஆலோசனை கூறினர் என்று பெருமையுடன் கூறினார். ஆனால் அதே நேரம் கர்நாடகாவில் தற்போது ஒரு தமிழ் எம்.எல்.ஏ., கூட இல்லையே என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.