அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் மீண்டும் மின் தடை: கர்ப்பிணிகள் தவிப்பு
அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் மீண்டும் மின் தடை: கர்ப்பிணிகள் தவிப்பு
மதுரை: மதுரையில் மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் நேற்றும் மின்தடை ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் நேற்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இவ்விழாவில், மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் வட்டாரங்களின் 200 கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசின் சார்பில் சீர்வரிசை செய்து சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.
அமைச்சர் நிர்மல்குமார் துவக்கிவைத்து வளைகாப்பு சீர்வரிசைகள் வழங்குவதாக இருந்தது. கர்ப்பிணிகள் அனைவரும் தமுக்கம் மாநாட்டு மையத்தில் காத்திருந்தனர். அமைச்சர் வருவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாக திடீரென மின்தடை ஏற்பட்டது. மின்துறை அமைச்சர் வரும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால் பதறிப்போன அதிகாரிகள் உடனடியாக ஜெனரேட்டரை இயக்கியதால் விளக்குகள், மின்விசிறிகள் இயங்கின. ஏற்கனவே நேற்று முன்தினம் மதுரை சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவும் இதே தமுக்கம் மாநாட்டு மையத்தில் நடந்தது.
நீதிபதி பேசிக்கொண்டிருந்தபோதே மின்தடை ஏற்பட்டது விமர்சனத்தை, பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்தொடர்ச்சியாக நேற்றும் இதே இடத்தில் அரசு நிகழ்ச்சியின்போது, அமைச்சர் வர இருந்த நிலையில் மின்தடை ஏற்பட்டு, மீண்டும், மீண்டும் அமைச்சர் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து மின்தடை என்ற விமர்சனத்தை அதிகரித்தது. திடீர் மின்தடையால் கர்ப்பிணி பெண்கள் தவித்தனர்.
விழாவில் பங்கேற்று அமைச்சர் நிர்மல்குமார் பேசும்போது, ‘மதுரை அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் துவக்குகிறார். அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் வகையில் குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது’ என்றார். ஆனால் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கடந்த ஆட்சியிலேயே நிதி ஒதுக்கி பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தவெக அரசு நிதி ஒதுக்கியதாக அமைச்சர் பேசியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
* மின்வெட்டே இல்லீங்க... ஜெனரேட்டரை மாத்தினோம்... திரும்ப திரும்ப முட்டுகொடுக்கும் மின்துறை அமைச்சர்
மதுரையில் நேற்று அமைச்சர் நிர்மல் குமார், நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவை குழிதோண்டி புதைக்கும் வரை எடப்பாடி பழனிசாமி ஓயமாட்டார். அரசு அலுவலகங்களில் 100 சதவீதம் லஞ்சம் இல்லாமல் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
எந்த அரசு அலுவலகத்தில் லஞ்சம் கேட்கப்பட்டாலும் பொதுமக்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும். தகவல் கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை சட்டக்கல்லூரி விழாவில் மின்வெட்டு நடக்கவில்லை. ஜெனரேட்டர் இணைப்பை மாற்றியதால் 5 வினாடிகளே மின்தடை ஏற்பட்டது. ஒரு ஜெனரேட்டரில் இருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு இணைப்பை மாற்றியதால்தான் இந்த மின்வெட்டு ஏற்பட்டது.
தவெக ஆட்சியில் ஆர்டிஐ நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதே என்கிறீர்கள். ஒரு சில விவரங்களுக்கு மட்டும் ஆர்டிஐயில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் அல்ல. ஏற்கனவே ஒரு சில விவரங்களுக்கு தகவல் கொடுக்கக்கூடாது என விதி உள்ளது. சாதிரீதியான பிரச்னைகள் சிலருக்கு சங்கடங்களை ஏற்படுத்துகிறது. அதனால் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தம் 20 செக்சன் உள்ளது.
இதில் ஒரு சிலவற்றிற்கு மட்டும்தான் தகவல் வாங்க முடியாது, பொதுமக்கள் கருத்து கேட்டு, சங்கடங்கள் இருக்கும் நிலையில் முதல்வரிடம் எடுத்துச் சொல்வோம். இவ்வாறு கூறினார். ஏற்கனவே மின்வெட்டு என்று சொல்லாதீர்கள். மின் பற்றாக்குறை என்று சொல்லுங்கள். பஞ்சாப்பில் 14 மணி நேரம் மின்வெட்டு நடக்கிறது என்று மின்வெட்டை நியாயப்படுத்தி வந்தார் அமைச்சர் நிர்மல்குமார்.
தற்போது, ஜெனரேட்டர் இணைப்பை மாற்றியதால் மின்தடை ஏற்பட்டது என்ற நிர்மல்குமாரின் பேட்டி, சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி உள்ளது. அப்படியானால் தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் மின்சாரம் மூலம் அல்லாமல், ஜெனரேட்டர் மூலமாகத்தான் நடக்கிறதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.