மாணவி புகார்: அண்ணாமலை பல்கலைக்கழக துறைத் தலைவர் தற்காலிக பணிநீக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறைத் தலைவர் ராஜேந்திரன் மீது மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து ராஜேந்திரனை பல்கலைக்கழக நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சிதம்பரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் வேதியியல் துறையில் 3-ம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 15-ந் தேதி மாணவி வேதியியல் துறை அலுவலகத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது துறைத் தலைவர் ராஜேந்திரன், மாணவியின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து அவதூறாக பேசியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் மாணவி புகார் அளித்துள்ளார்.
போலீசில் புகார்
இந்த சம்பவம் தொடர்பாக மாணவி அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையை தொடர்ந்து, துறைத் தலைவர் ராஜேந்திரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மாணவி அளித்த புகார் மற்றும் போலீசார் மேற்கொண்டு வரும் விசாரணையை தொடர்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் வேதியியல் துறைத் தலைவர் ராஜேந்திரனை தற்காலிக பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
மாணவி அளித்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.