'பாயும் நெருப்பே' எம்பாப்வே: அரையிறுதியில் பிரான்ஸ்
பாஸ்டன்: உலக கோப்பை கால்பந்து அரையிறுதிக்கு பிரான்ஸ் அணி முன்னேறியது. கேப்டன் எம்பாப்வே, டெம்பலே தலா ஒரு கோல் அடிக்க, காலிறுதியில் 2-0 என வெற்றி பெற்றது. மொராக்கோ அணி வெளியேறியது.
மெக்சிகோ, கனடா, அமெரிக்காவில், உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் நடக்கிறது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த முதல் காலிறுதியில் பிரான்ஸ், மொராக்கோ அணிகள் மோதின. இப்போட்டியில் மொராக்கோ அணியின் இஸ்மாயில் சாய்பரி, காயத்தால் விளையாடவில்லை.
'பெனால்டி' வீண்: ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் 'கோல் ஏரியா' பகுதியில் மொராக்கோவின் மஸ்ராய், பிரான்சின் எம்பாப்வேயை கீழே தள்ளிவிட்டார். இதனை 'வார்' தொழில்நுட்பத்தில் உறுதி செய்த நடுவர், பிரான்ஸ் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு வழங்கினார். இதில் (28வது நிமிடம்) எம்பாப்வே அடித்த பந்தை மொராக்கோ கோல்கீப்பர் யாசின் பூனு கச்சிதமாக பிடித்தார். 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+2வது நிமிடம்) பிரான்சின் லுாகாஸ் டின்யே துாக்கி அடித்த பந்து 'கோல் போஸ்ட்டில்' பட்டு வெளியேறியது. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
இரண்டு கோல்: இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட பிரான்ஸ் அணிக்கு 60வது நிமிடத்தில் டுவே 'பாஸ்' செய்த பந்தில் எம்பாப்வே ஒரு கோல் அடித்தார். அடுத்த 6வது நிமிடத்தில் (56வது), எம்பாப்வே 'அசிஸ்ட்' செய்த பந்தில் டெம்பலே ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். பின், 83வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அசெடின் உனாஹி கோல் அடிக்க முயற்சித்த பந்தை பிரான்ஸ் கோல்கீப்பர் மைக் மைக்னான் தடுத்தார். முடிவில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
எட்டாவது முறை
உலக கோப்பை கால்பந்து அரங்கில், அதிக முறை அரையிறுதிக்கு முன்னேறிய அணிகளுக்கான பட்டியலில் 2வது இடத்தை (தலா 8 முறை) பிரேசிலுடன் பகிர்ந்து கொண்டது பிரான்ஸ். முதலிடத்தில் ஜெர்மனி (12 முறை) உள்ளது.
* தொடர்ந்து 3 முறை (2018, 2022, 2026) அரையிறுதிக்கு முன்னேறிய 3வது அணியானது பிரான்ஸ். ஏற்கனவே ஜெர்மனி (1982-1990, 2002-2014), பிரேசில் (1994-2002) இப்படி சாதித்திருந்தன.
மீண்டும் ஏமாற்றம்
கடந்த 2022ல் கத்தாரில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் மொராக்கோ அணி 0-2 என, பிரான்சிடம் தோல்வியடைந்தது. நான்கு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ஏமாற்றிய மொராக்கோ அணி, காலிறுதியில் 0-2 என பிரான்சிடம் தோற்றது.
இம்முறை அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை அர்ஜென்டினாவின் மெஸ்ஸியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் பிரான்சின் எம்பாப்வே. இருவரும் தலா 8 கோல் அடித்துள்ளனர்.
* அதிக கோல் அடித்தவருக்கு வழங்கப்படும் 'கோல்டன் பூட்' விருதுக்கான பட்டியலில், சகவீரர்கள் கோல் அடிக்க 'அசிஸ்ட்' செய்ததன் அடிப்படையில் மெஸ்ஸியை (1 'அசிஸ்ட்') முந்திய எம்பாப்வே (3 'அசிஸ்ட்') முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடம்
உலக கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் பிரான்சின் எம்பாப்வே 2வது இடத்தில் உள்ளார். இதுவரை 20 போட்டியில், 20 கோல் அடித்துள்ளார். முதலிடத்தில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி (21 கோல், 31 போட்டி) நீடிக்கிறார். இளம் வீரரான எம்பாப்வே 27, அடுத்த உலக கோப்பை சீசனில் மெஸ்ஸியின் 39, இச்சாதனையை முறியடித்து முதலிடம் பிடிக்கலாம்.
சூப்பர் ஜோடி
இம்முறை பிரான்சின் எம்பாப்வே (8), டெம்பலே (5) இணைந்து 13 கோல் அடித்துள்ளனர். ஒரு சீசனில், ஒரே அணியை சேர்ந்த இருவர் இணைந்து 13 கோல் அடித்தது 2வது முறை. இதற்கு முன், 2002ல் பிரேசிலின் ரொனால்டோ (8), ரிவால்டோ (5) இப்படி சாதித்திருந்தனர்.
முல்லரை நெருங்குகிறார்
உலக கோப்பை அரங்கில், ஒரு சீசனில் அதிக கோல் பதிவாக காரணமான வீரர்கள் வரிசையில் 2வது இடத்தில் உள்ளார் பிரான்சின் எம்பாப்வே. இம்முறை 8 கோல் அடித்த எம்பாப்வே, சகவீரர்கள் கோல் அடிக்க 3 'அசிஸ்ட்' செய்துள்ளார். முதலிடத்தில் ஜெர்மனியின் ஜெர்டு முல்லர் (10 கோல், 3 'அசிஸ்ட்', 1970) உள்ளார்.
முதல் வீரர்
பிரான்ஸ் அணிக்காக 100+ கோல் பதிவாக காரணமான முதல் வீரரானார் எம்பாப்வே. இதுவரை 104 போட்டியில், 64 கோல், 37 'அசிஸ்ட்' என, 101 கோல் அடிக்க காரணமாக இருந்துள்ளார்.
நான்காவது இடம்
உலக கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் 4வது இடத்தை இத்தாலியுடன் பகிர்ந்து கொண்டது பிரான்ஸ். இரு அணிகளும் தலா 45 போட்டியில் வென்றுள்ளன. முதல் மூன்று இடங்களில் பிரேசில் (79 வெற்றி), ஜெர்மனி (70), அர்ஜென்டினா (52) உள்ளன.
கணுக்கால் காயம்
ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் பிரான்சின் எம்பாப்வே மீது மொராக்கோ வீரர் மோதினார். இதனால் வலது கணுக்காலில் லேசாக காயமடைந்த எம்பாப்வே மைதானத்தில் கீழே விழுந்தார். உடனடியாக வெளியேறிய இவருக்கு மாற்றாக ஜீன்-பிலிப் மடேடா களமிறங்கினார்.
எம்பாப்வே கூறுகையில், ''போட்டியில் எனது கணுக்காலில் அடிப்பட்டது. ஆனால் தற்போது நலமுடன் இருக்கிறேன்,'' என்றார்.
உலக கோப்பை அரங்கில் 20 போட்டிகளில் விளையாடிய இளம் வீரரானார் (27 ஆண்டு, 201 நாள்) பிரான்சின் எம்பாப்வே. இதற்கு முன், போலந்தின் விலாடிஸ்லாவ் ஸ்முடா (28 ஆண்டு, 34 நாள்) இச்சாதனை படைத்திருந்தார்.
* உலக கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடிய பிரான்ஸ் வீரர்கள் வரிசையில் முதலிடத்தை (20 போட்டி) ஹுகோ லோரிசுடன் பகிர்ந்து கொண்டார் எம்பாப்வே.
* உலக கோப்பை வரலாற்றில் குறைந்த போட்டியில் 20 கோல் எட்டிய வீரரானார் எம்பாப்வே. இதற்கு முன் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, 30 போட்டியில் இந்த இலக்கை அடைந்திருந்தார்.
உலக கோப்பை கால்பந்து தொடரில் அசத்தி வரும் பிரான்சின் கிலியன் எம்பாப்வே 27, விளையாட்டு குடும்பத்தில் பிறந்தவர். கேமரூன் நாட்டை சேர்ந்த இவரது தந்தை வில்பிரைட் எம்பாப்வே கால்பந்து பயிற்சியாளர். அல்ஜீரிய வம்சாவளியான இவரது தாயார் பைசா லமாரி, முன்னாள் 'ஹேண்ட்பால்' வீராங்கனை. இவரது தம்பி ஈதன் எம்பாப்வே லோட்டின், 'கிளப்' கால்பந்து போட்டியில் லில்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எம்பாப்வே, சிறு வயது முதல் கால்பந்து விளையாடி வருகிறார். குடும்ப வறுமையை கடந்து, தனது திறமையை வெளிப்படுத்திய எம்பாப்வே, மொனாகோ, பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன், ரியல் மாட்ரிட் போன்ற கிளப் அணிகளுக்காக அசத்தினார். கடந்த 2017ல் சீனியர் அணியில் அறிமுகமான இவர், தற்போது பிரான்ஸ் ரசிகர்களின் 'ஹீரோ'வாக உருவெடுத்துள்ளார்.