📅 Sunday, 12 July 2026 IST | ஆனி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 11, 2026 10:31 PM

பாரதிராஜா

பாரதிராஜா

சென்னை: கடந்த ஜூன் மாதம் மொத்த திரை உலகத்தினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்திய மாதமாகத்தான் அமைந்தது. நல்ல நல்ல படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தாலும், குறைந்த பட்ஜெட்டில் உருவாகி நல்ல வசூலைப் பெற்ற படங்களும் பாராட்டுக்களைக் குவித்தாலும், மொத்த திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியது, இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மரணமும், அவரது சிஷ்யன் பாக்யராஜின் மரணமும் தான்.

ஜூன் மாதம் 10ஆம் தேதி உடல்நலக் குறைவாலும் வயது மூப்பாலும் இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்தார். அதையடுத்து அவரது சிஷ்யன் பாக்யராஜ் ஜூன் 27ஆம் தேதி திடீர் மாரடைப்பால் காலமானார். இவர்களின் அடுத்தடுத்த மறைவு மொத்த திரை உலகத்தினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவுக்கு மட்டும் இல்லாது இந்திய சினிமாவிலேயே புரட்சிகளை உருவாக்கியவர்கள்.

இப்படி இருக்கையில் இவர்கள் இருவரின் புகழ் குறித்து எவ்வளவு பேசினாலும் அவ்வளவும் வருங்கால தலைமுறையினருக்கு பாடமாக அமையும் என்று போற்றலாம். இப்படி இருக்கையில், பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் என இருவருக்கும் சேர்த்து தமிழ் சினிமா உலகத்தினரால் பிரமாண்டமான நினைவேந்தல் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

எப்போது நினைவேந்தல்: இந்த நினைவேந்தல் கூட்டமானது தலைநகர் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்படவுள்ளது. மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி இந்த நினைவேந்தல் கூட்டத்தை நடத்த நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், எழுத்தாளர் சங்கம் என தமிழ் திரையுலகில் உள்ள சங்கத்தினர் இணைந்து இந்த ஏற்பாட்டை முன்னெடுத்து வருகிறார்கள். இதற்காக ஜாம்பவான்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரையும் அனுகி வருகிறார்கள். வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த நினைவேந்தல் கூட்டமானது நடக்கவுள்ளது.

தீவிரமான முயற்சி: இது குறித்து விரைவில் அறிவிப்புகள் வரவுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொண்ட யூடியூப் சேனல்கள், சாட்டிலைட் சேனல்கள் மற்றும் ஓடிடி சேனல்கள் பலவும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை பெறவும் முயற்சிகள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.