Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
இசைஞானி இளையராஜா இசையில் பாடிய முதல் பெண் பாடகி ஜானகி. அன்னக்கிளி படத்தில் அவர் 3 பாடல்கள் பாடியிருப்பார்.
இந்திய திரையுலகின் மிகவும் தவிர்க்க முடியாத பாடகி ஜானகி. இவர் இன்று மைசூரில் காலமானார். அவரது மறைவு மொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜானகி எனும் ஆளுமை:
தமிழின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களான கேவி மகாதேவன், எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர் ராஜா, அனிருத் இசையில் பாடியுள்ளார். 1957ம் ஆண்டு தமிழில் பாடத் தொடங்கிய ஜானகியை எம்எஸ் விஸ்வநாதனும், இளையராஜாவுமே அதிகளவில் தங்களது இசையில் பாட வைத்தனர்.
இளையராஜாவின் முதல் பாடகி:
குறிப்பாக, தமிழ் சினிமாவின் இசையின் போக்கையே மாற்றிய இளையராஜா முதன்முதலாக இசையமைத்த திரைப்படம் அன்னக்கிளி. இந்த படத்தில் இளையராஜா-வின் முதல் பாடலான அன்னக்கிளி உன்னைத் தேடுதே பாடலைப் பாடியவர் ஜானகி ஆவார். இந்த பாடல் இந்த படத்தின் வெற்றியைக் காட்டிலும் இளையராஜா என்ற ஒரு இசையமைப்பாளரையும், தமிழ் சினிமாவின் இசை ஒரு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கப்போகிறது என்பதற்கான அடிக்கல் ஆகும்.
அப்படி தமிழ் சினிமாவின் புதிய பாதையை இளையராஜா அமைப்பதற்கு முக்கியமான வழிகாட்டியாக இந்த பாடலில் அமைந்தவர் ஜானகி. இளையராஜாவின் இசை பட்டிதொட்டியெங்கும் சென்று சேர ஜானகியின் குரல் மிகப்பெரிய பலமாக அமைந்தது. அதே படத்தில் மச்சானா பாத்தீங்களா? பாடலும், முத்து முத்தா பாடலையும் ஜானகி பாடியிருப்பார். இந்த பாடல்களும இன்றளவும் மிகப்பெரிய வெற்றிப்பாடல்கள் ஆகும்.
பாட்டு சாம்ராஜ்யம்:
இதன்பின்னர், இளையராஜாவின் தவிர்க்க முடியாத பாடகியாக ஜானகி மாறினார். இளையராஜாவின் இசையில் 16 வயதினிலே படத்தில் செந்தூரப் பூவே, மஞ்சக்குளிச்சி, ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் ராஜா எம்பார் மந்திரி எம்பார், கவிக்குயில் படத்தில் சின்ன கண்ணன் அழைக்கிறான், சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நினைவோ ஒரு பறவை, ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் கண்மணியே காதல் என்பது, தர்ம யுத்தம் படத்தில் ஆகாய கங்கை, ஜானி படத்தில் காற்றில் எந்தன் கீதம், அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஆயிரம் தாமரை, கடல் மீன்கள் படத்தில் தாலாட்டுதே வானம், ஆட்டோ ராஜா படத்தில் சங்கத்தில் பாடாத, மண் வாசனை படத்தில் பொத்தி வச்ச, வைதேகி காத்திருந்தாள் படத்தில் அழகு மலராட என ஏராளமான ப்ளாக்பஸ்டர் பாடல்களை பாடியுள்ளார்.
இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தில் மிகப்பெரிய தூணாக திகழ்ந்தவர் ஜானகி. கடைசியாக தமிழில் இளையராஜா இசையில் ராஜஸ்தான் படத்தில் மச்சான் என்ற பாடலை பாடியுள்ளார். இளையராஜா இசையில் எஸ்பி பாலசுப்ரமணியத்துடன் இணைந்து ஜானகி ஏராளமான காதல் பாடல்களை பாடியுள்ளார்.
தமிழில் காதல், சோகம், குத்து, கவர்ச்சி பாடல் என பாடல்களை இளையராஜா தனது இசையில் ஜானகியை பாட வைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி