“மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி இல்லை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்” - சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் உரை
"மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை தமிழக மக்கள் நிரூபித்துள்ளனர்" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வரிகளுடன், தமிழகத்தின் புதிய த.வெ.க அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் உரையுடன் இன்று (ஜூன் 18) தொடங்கியது. புதியதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசின் தொலைநோக்குத் திட்டங்கள், நிதிச் சுமைக்கான தீர்வுகள் மற்றும் மாநில உரிமைகள் குறித்த பல்வேறு அதிரடி அறிவிப்புகளை ஆளுநர் தனது உரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய மாநில ஆளுநர் ஆர்.வி. அர்லேகர், தமிழகத்தில் எப்போதும் 'மும்மொழிக் கொள்கை'க்கு அனுமதியில்லை என்றும், காலம் காலமாகத் தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'இருமொழிக் கொள்கை' மட்டுமே தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார். நீதிமன்றத் தீர்ப்புகளின்படி தமிழை முதன்மை வழக்காடு மொழியாக்கத் த.வெ.க அரசு பாடுபடும் என்றும், தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழித் திட்டத்தை ஏற்காததால் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள கல்வி நிதியைத் தமிழகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்புச் சீர்திருத்தங்கள்:
கல்வித் துறை தற்போது பொதுப் பட்டியலில் இருப்பதால் நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற அனைத்து சட்டப் போராட்டங்களையும் த.வெ.க அரசு முன்னெடுக்கும். மேலும், தமிழகக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் கல்வித்துறையின் இதர காலிப் பணியிடங்கள் அனைத்தும் வெளிப்படையான முறையில் மிக விரைவாக நிரப்பப்படும் என ஆளுநர் உறுதியளித்தார்.
குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்:
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு மிக உயர்ந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் போதைப்பொருள் புழக்கம் கட்டுப்படுத்தப்படாமல் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் வேரூன்றியுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், புதிய த.வெ.க அரசு போதைப்பொருட்களை முழுமையாக ஒழிக்கத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.
ரூ.10 லட்சம் கோடி கடன் சுமை மற்றும் தூய நிர்வாகம்:
தமிழகத்தின் தற்போதைய கடன் அளவு ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்றும், ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் ஒரு லட்சம் ரூபாக்கு மேல் கடன் சுமை உள்ளது என்றும் கவலை தெரிவித்தார். இதைச் சீரமைக்க டாஸ்மாக் துறையில் முறைகேடாகச் சென்ற நிதியை அரசு நிர்வாகத்திற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குவாரிகளில் நடக்கும் சட்டவிரோத முறைகேடுகளைத் தடுத்து, கனிம வள வருவாயை இருமடங்காக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. ஊழலற்ற தூய நிர்வாகத்தை வழங்குவதில் த.வெ.க அரசு உறுதியாக உள்ளது.
மாநில உரிமைகள் மற்றும் காவேரி விவகாரம்:
காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டுவதைத் தடுத்து நிறுத்த த.வெ.க அரசு அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கும். சமீபத்தில் டெல்லியில் பாரதப் பிரதமரைச் சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கியுள்ளார் என்றும் ஆளுநர் அர்லேகர் தனது உரையில் குறிப்பிட்டார்.