``கரூர் த.வெ.க கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு... அரசுப் பணி வழங்குவது சரியா..?”
``கரூர் த.வெ.க கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு... அரசுப் பணி வழங்குவது சரியா..?”
பொதுவாக, கள்ளச்சாராய மரணங்கள், அரசு நிகழ்ச்சிகளில் ஏற்படும் மரணங்கள் உள்ளிட்ட, அரசு கடமை தவறியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் இழப்பீடு, அரசுப் பணி வழங்கப்படுவது வழக்கம்.
கரூரில், சென்ற வருடம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 285 நாள்களான நிலையில், முதல்வரான பின் தற்போது முதன்முறையாக கரூர் சென்ற விஜய், உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை ஆணையை வழங்கியுள்ளார். இது, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
`தனிப்பட்ட அரசியல் கட்சியின் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு, அரசுப் பணி வழங்குவது நியாயமா?’, ‘அரசுப் பணியை இழப்பீடாக ஆக்குவது சரியா?’, `மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு, அரசுப் பணிகளை கருணை அடிப்படையில் வழங்கலாமா?’ எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.
அன்று நடந்தது என்ன?
2025, செப்டம்பர் 27-ம் தேதி கரூர், த.வெ.க கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ‘த.வெ.க தலைவர் விஜய்யின் வருகை தாமதமானதுதான் அசம்பாவிதம் ஏற்படக்காரணம்’ என தி.மு.க உள்ளிட்ட தரப்பினர் கண்டித்தனர். த.வெ.க தரப்பு, ‘காவல்துறை முறையாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாததே அசம்பாவிதத்துக்குக் காரணம்’ என்றது.
தொடர்ந்து, அன்றைய தி.மு.க அரசு உயிரிழந்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் 10 லட்சம் ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக வழங்கியது. ஆனால், ‘2024-ல் சென்னை, மெரினாவில் தமிழக அரசு ஒருங்கிணைத்த விமானப் படை சாகச நிகழ்ச்சியின்போது வெயில், கூட்ட நெரிசலால் உயிரிழந்த 5 பேர் குடும்பங்களுக்கே, ரூ.5 லட்சம் நிவாரண நிதிதான் தி.மு.க அரசு வழங்கியது. இந்த நிலையில், ஓர் அரசியல் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்தவர்களுக்கு தி.மு.க அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டிய அவசியம் என்ன? இது, வரும் தேர்தலில் த.வெ.க தலைவர் விஜய்க்கு எதிராக வாக்குகளை அறுவடை செய்வதற்கான தி.மு.க அரசின் அரசியல் நடவடிக்கை’ என்று விமர்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து, த.வெ.க கட்சியில் இருந்தும் உயிரிழந்த ஒவ்வொரு வருக்கும் ரூ.20 லட்சம் இழப்பீடு அவர் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில்தான், முதல்வர் விஜய் தற்போது, கரூர் நெரிசலில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திலும் ஒருவருக்கு அரசுப் பணிக்கான ஆணையை வழங்கியுள்ளார். `இது, அரசுப் பணி என்ற பொதுச் சொத்தின் அடிப்படைத் தத்துவத்தையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. தகுதி, மனிதாபிமானம் ஆகியவற்றுக்கு இடையேயான கோடு எங்கே வரையப்பட வேண்டும் என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது’ என்பவர் களிடம், அது குறித்துக் பேசியபோது...
‘`அரசின் தவற்றுக்கு அரசு பொறுப்பேற்கலாம், தனிநபரின் தவறுக்கு அல்ல!’’
- எம்.எம்.அப்துல்லா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர், தி.மு.க. அயலக அணி செயலாளர்
``முதலில் காலிப் பணியிடங்களை நிரப்புங்கள்!’’
- ஜெயக்குமார், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்
“தமிழகத்தில் அரசுத் துறைகளில் சுமார் மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதியில், `ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்’ என்று கூறப்பட்டிருந்தது. அது வரவேற்கத்தக்கது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றன. மனிதாபி மான அடிப்படையில் அவர் களுக்கு அரசு வேலை வழங்கு வது தவறில்லை. ஆனால், அதைவிட முக்கியமாக, அரசின் முதன்மை கவனம் மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பி, போட்டித் தேர்வு களுக்குத் தயாராகி வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதில்தான் இருக்க வேண்டும்.”
“மக்களின் வரிப்பணத்தில் அரசுப் பணி வழங்குவதை ஏற்க முடியாது!”
- சே.பாக்கியராசன், மாநில செய்தித் தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி
“கரூர் பொதுக்கூட்டத்துக்கு த.வெ.க தலைவர் விஜய்யைப் பார்க்க வந்தவர்கள் உயிரிழந்த நிலையில், அவர் முதல்வராகப் பதவியேற்ற பிறகோ, தனது சட்டமன்ற உரையிலோ அவர்களுக்கு இரங்கல் கூடத் தெரிவிக்கவில்லை. இத்தனை உயிர்கள் பறிபோன பிறகும், அன்று மலேசியாவில் தனது படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் நடனமாடினார். இப்போதுவரை, தன் தவற்றை ஒப்புக்கொள்ளாமல் இதில் மற்றவர்களையே பொறுப்பாக்கிப் பேசுகிறார்.
கரூரில் இடைத்தேர்தல் வரவிருக்கிறது. அந்த அரசியல் நோக்கத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் லட்சக்கணக் கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுதி பணிக்காகக் காத்திருக்கிறார்கள். அரசு வேலை என்பது பல ஆண்டுகள் உழைத்து, சேவை மனப்பான்மையுடன் தயாராகும் இளைஞர்களின் கனவு. அந்த வாய்ப்பை எந்தக் கொள்கை அடிப்படையும் இல்லாமல், மனம் போன போக்கில் கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு வழங்குவதை ஏற்க முடியாது.
2024-ல் நடந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு களுக்கு, தி.மு.க அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியதை நாங்கள் கண்டித்தோம். காரணம், அரசின் நிர்வாகத் தோல்விக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஏன் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பதே. அதேபோல், முதல்வர் விஜய்யின் இந்த முடிவையும் நாங்கள் கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இழப்பைச் சந்தித்திருக்கின்றன என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதற்கான தீர்வு அரசு வேலை வழங்குவதல்ல. உதவ வேண்டும் என்றால், த.வெ.க கட்சி மூலமாகவோ, அவர்களது நிறுவனங்கள் மூலமாகவோ வேலை வழங்கலாம். மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசுப் பணியை, ஒரு கட்சித் தலைவரைப் பார்க்கச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதை, ஒரு குடிமகனாக நான் ஏற்கவில்லை.”
“அரசுப்பணிக்காகக் காத்திருப்பவர்களின் வாய்ப்பைப் பறிக்கக்கூடாது!”
- கீதா நாராயணன், சமூகச் செயற்பாட்டாளர்
“அந்தக் கூட்டத்துக்குச் சென்றவர்கள் த.வெ.க தலைவர் நடிகர் விஜய்யைப் பார்க்கத்தான் சென்றிருந்தார்கள். அந்த உயிரிழப்புகள், சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு பேரிழப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தி.மு.க அரசு வழங்கிய ரூ.10 லட்சம், த.வெ.க வழங்கிய ரூ.20 லட்சம் இழப்பீட்டுத் தொகைகள், அவர்கள் நிவாரணத்துக்கு நிச்சயம் தேவைதான்.
ஆனால், ஆண்டுக்கணக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக் கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக் கிறார்கள். அவர்களுடைய வாய்ப்பைப் பறித்து, இவர்களுக்கு அரசு வேலை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சமூக சேவை செய்யும்போதோ, மக்கள் நலப் பணியில் ஈடுபட்டிருக்கும் போதோ உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், இது எப்படி நியாயமாகும்?”
த.வெ.க அரசு, தன் முடிவுகள் தொடர்பான விமர்சனங்களுக்கு மதிப்பளித்துப் பதிலளிக்க வேண்டும். அந்த விமர்சனங்களின் அடிப்படையில் தனது அடுத்தடுத்த முடிவுகளை சீர்தூக்கிச் செயல்படுத்த வேண்டும்.