📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 13, 2026 06:33 PM

கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை: தவெகவுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றது அதிமுக

கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை: தவெகவுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றது அதிமுக

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாக, தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கபட்டதை அடுத்து, தவெகவுக்கு எதிரான வழக்கை அதிமுக நிர்வாகி திரும்பப் பெற்றார்.

அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி வளாகங்களில், தவெக நிர்வாகிகள் நுழைந்து, தங்கள் கட்சித் தலைவர்களை முன்னிலைப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், தலைவருக்கு ஆதரவாக, ‘விஜய் அண்ணா’, ‘விஜய் மாமா’ என, மாணவர்களை வாழ்த்து கோஷங்கள் எழுப்பச் செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தேசியத் தலைவர்கள் புகைப்படங்களுடன், தவெக தலைவர் படத்தையும் காட்சிப்படுத்துவதாகவும், கல்வி நிறுவனங்களில் சினிமா பாடல்கள் பாடப்படுகின்றன என, சமூக ஊடகங்கள், ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில், அரசியல் பிரச்சாரத்துக்காக தவறாகப் பயன்படுத்தி, மாணவர்களை அரசியல் ரீதியாக சுரண்டும் தவெகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் புகார் அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அரசியல் சாசன விதிகளையும், கல்வி உரிமை சட்ட விதிகளையும் மீறி செயல்படுவது குறித்து, உடனே விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், இந்நிகழ்வுகளை அனுமதிக்கும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவன அதிகாரிகளுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கல்வி நிறுவனங்களில், அரசியல் பிரசாரங்களை தடை செய்து, விதிமுறைகளை வகுக்க வேண்டும் என, மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தவெகவின் இந்த செயல்பாடுகள், பள்ளி, கல்லுாரிகளில் கல்வி பயிலும் சூழலை இடையூறாக உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரே விஷயத்துக்காக ஏன் வழக்கு மேல் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து கடந்த 10-ம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.