மீண்டும் புதைகுழியாகும் வயநாடு... பேரழிவிலிருந்தும் பாடம் கற்காத கேரளம்!
மீண்டும் புதைகுழியாகும் வயநாடு... பேரழிவிலிருந்தும் பாடம் கற்காத கேரளம்!
கோழிக்கோட்டிலிருந்து வயநாட்டுக் கான பயண நேரத்தை ஒன்றரை மணி நேரம் குறைப்பதற்காக, கள்ளாடி மலையைக் குடைந்து 8 கிலோமீட்டர் நீளத்தில் ராட்சதக் குழாய்களைப் பொருத்தி இரட்டைச் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது
ஒருகாலத்தில் ‘கடவுளின் தேசம்’ என்று போற்றப்பட்ட வயநாடு, இன்று ‘நிலச்சரிவின் பூமி’ என்ற அடையாளத்துடன் போராடிக் கொண்டிருக்கிறது. 2024, ஜூலை 30-ம் தேதி சூரல்மலை–முண்டக்கை பகுதியில் நிகழ்ந்த வரலாறு காணாத நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். சில கிராமங்களே வரைபடத்திலிருந்து அழிந்து போயின. அந்தப் பேரழிவின் காயங்கள் இன்னும் ஆறவில்லை. இந்த நிலையில், மீண்டும் அதே வயநாட்டில் மண் சரிந்து மனித உயிர்களைக் காவு வாங்கியிருப்பது, “பேரழிவிலிருந்து இன்னும் கேரளம் பாடம் கற்றுக்கொள்ள வில்லை” என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வயநாடு மாவட்டம், கள்ளாடி மீனாட்சி பாலம் பகுதியில் நடைபெற்றுவந்த அனக்கம்பொயில் –மேப்பாடி இரட்டைச் சுரங்கப்பாதை அமைக்கும் பணித் தளத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தொழிலாளர்கள் பலர் மண்ணுக்குள் புதைந்தனர். உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப்பணியில் இறங்கியதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இருப்பினும் இதுவரை ஆறு தொழிலாளர்கள் பலியாக, புதைந்துபோன இன்னும் சிலரை தேடிவருகிறார்கள். ஏழு பேர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்.
இந்த விபத்தின் பின்னணியில் இருப்பது, மாநிலங்களுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதாகக் கூறி, மத்திய அரசு செயல்படுத்திவரும் ரூ.2,134.5 கோடி மதிப்பிலான அனக்கம்பொயில்–மேப்பாடி இரட்டை சுரங்கப்பாதைத் திட்டம். மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக முக்கியமான சூழலியல் மண்டலங்களில் ஒன்றான வயநாட்டில், மலைகளின் இயற்கை அமைப்பில் ஏற்படும் சிறிய மாற்றம்கூடப் பேரழிவை ஏற்படுத்தும் என்று மாதவ் காட்கில் உள்ளிட்ட சூழலியல் நிபுணர்கள் பலமுறை எச்சரித்தும், கடந்த ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து வெறும் 4 கிலோமீட்டர் தொலைவிலேயே இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சுரங்கப்பாதை அமைப்பதற்காக 42.6 ஏக்கர் வன நிலமும், தோண்டி எடுக்கப்பட்ட மண்ணையும் பாறைகளையும் கொட்டுவதற்காக சுமார் 40 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. “மத்திய அரசுத் திட்டம் என்பதால், மாநில அரசிடம் தனியாகத் தடையில்லாச் சான்று பெறப்படவில்லை” என்கிறார்கள் அதிகாரிகள். சரி, விபத்து எப்படி நிகழ்ந்தது?
மீனாட்சி பாலம் பகுதி மக்கள், “பல மாதங்களாக மலையைக் குடைந்து எடுக்கப்பட்ட மண், பாறைகள் அங்கேயே குவிக்கப்பட்டிருந்தன. லேசான மழைக்கே சேறும் சகதியும் சாலையில் வழிந்து வந்தது. அதை அகற்றாமல், தண்ணீர் ஊற்றி சாலையைச் சுத்தம் செய்வதிலேயே அதிகாரிகள் கவனம் செலுத்தினர். இந்த நிலையில்தான் செவ்வாய்க்கிழமை ஒட்டு மொத்த மண்ணும் சரிந்து வேலையாட்கள், தேவாலயம், வீடுகள் என அனைத்தையும் மூடிவிட்டது” என்றார்கள் வேதனையுடன்.
வயநாடு மாவட்டப் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், “இந்தத் திட்டம் இயற்கைக்கு எதிரானது. ஆயிரம் அடி உயரமுள்ள மலையின் அடித்தளத்தையே பாதிக்கும் திட்டத்தில் ஆரம்பம் முதல் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளன. முழுமையான விசாரணை நடத்தினால் பல முக்கியப் பொறுப்பாளர்கள் சிக்க வாய்ப்பிருக்கிறது” என்றார்.
சூழலியல் எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன், “சுற்றுச்சூழலைக் காப்போம் என்று பேசும் மத்திய, மாநில அரசுகளே நடைமுறையில் அதற்கு எதிராகச் செயல்படுகின்றன. அந்த இரட்டை நிலைப்பாட்டின் விளைவுதான் வயநாட்டின் தொடர் நிலச்சரிவுகள்” என்று ஆதங்கப்பட்டார்.
கேரள முதல்வர் வி.டி.சதீசன், “ஜூன் 20-ம் தேதியே மண் குவியலை அகற்றுமாறு அதிகாரிகள் எச்சரித்திருந்தும், ஒப்பந்த நிறுவனம் அலட்சியம் காட்டியது. மஞ்சள் எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்ட நாளில், சிவப்பு எச்சரிக்கைக்கு இணையான மழை பதிவானதால் மண் சரிவு ஏற்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதி நிபந்தனைகள் மீறப்பட்டிருக்கின்றனவா என்பதையும், நிலச்சரிவுக்கான உண்மையான காரணத்தையும் கண்டறிய இரண்டு தனி விசாரணைகள் நடத்தப்படும். அதுவரை வயநாடு–கோழிக்கோடு சுரங்கப்பாதைப் பணிகள் நிறுத்திவைக்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார்.
இனி எத்தனை விசாரணை மேற்கொண்டாலும், போன உயிர்கள் திரும்பி வருமா?