'முருகன் தமிழனுக்கு சொந்தம்'
'முருகன் தமிழனுக்கு சொந்தம்' - தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் ’தமிழ் முருகன்’
ஏற்கனவே ஜூனியர் என்டிஆர் நடிப்பில் முருகனைப் பற்றி உருவாகும் படத்தின் அறிவிப்பு விவாதத்தை கிளப்பிய நிலையில், தற்போது 'தமிழ் முருகன்’ படத்தின் அறிவிப்பும் பேசுபொருளாகியுள்ளது
Published : July 11, 2026 at 7:46 AM IST
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள திரைப்படம் 'தமிழ் முருகன்’ படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்றாக கருதப்படும் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி இப்படம் மூலம் 5வது முறையாக இணைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தனுஷ் தனது சமூக இளையதளத்தில் ’DxV’ என தனது அடுத்த படம் குறித்து பதிவிட்டார். தனுஷின் அடுத்த படத்தை இயக்கப் போவது வெங்கட் பிரபு என பல யூகங்கள் வெளியானது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
The Eternal Protector, Warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.#தமிழ்முருகன் #ThamizhMurugan #SonOfKottravai▶️ https://t.co/jho8QWRBEs @dhanushkraja @SaiAbhyankkar #Arivumathi #VetriMaaran @wunderbarfilms @ProdMiles2Go pic.twitter.com/3f9Sw9rIpJ
எழுத்தாளரும், பாடலாசிரியருமான அறிவுமதி எழுதிய ‘தமிழ் முருகன்’ புத்தகத்தை தழுவி இப்படம் உருவாகிறது. தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள தமிழ் முருகன் படத்திற்கு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒன்டர் பார் பிலிம்ஸ் (Wunderbar Films) மற்றும் மைல்ஸ் டு கோ (Miles To Go) நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
தமிழ் முருகன் படத்தின் அறிவிப்பு வீடியோவில், யானை மீது ஏறி மாபெரும் போரினை வழிநடத்தக்கூடிய போர்படை தளபதியாக கதாநாயகன் தனுஷ் வருவது போன்ற பிரம்மாண்டமான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ’முரசு முழங்க, யாழ் இசை மீட்டுக’ என ஒலிக்கக்கூடிய வரலாற்றுப் பின்புலம் கொண்ட பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை பாடலசிரியர் அறிவுமதி எழுதியுள்ளார்.
ஜூனியர் என்டிஆர் திரைப்பட சர்ச்சை
சமீபத்தில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியானது. கடவுள் முருகனைப் பற்றி கதையாக உருவாகும் அப்படத்தின் அறிவிப்பு பதிவில், 'Born in the North forgedin the heartland worshipped in the south now A tale destined to belong to the universe' என தெரிவித்திருந்தனர். இதனையடுத்து முருகன் தமிழ்க் கடவுள் என்ற விவாதத்தை தமிழர்கள் சமூக வலைதளத்தில் முன் வைத்தனர். இந்நிலையில், தற்போது தமிழ் முருகன் படத்தின் அறிவிப்பு பேசு பொருளாகியுள்ளது.
தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் அடுத்ததாக ’வடசென்னை 2’ வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தமிழ் முருகன் நாவல் மூலம் இருவரும் இணைந்துள்ளனர். தனுஷை பொறுத்தவரை தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ’ஓம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த வருகிறார். அதேபோல் வெற்றிமாறன் தற்போது நடிகர் சிம்புவை வைத்து ’அரசன்’ படத்தை இயக்கி வருகிறார்.