தி.மு.க., 'மாஜி' செந்தில் பாலாஜிக்கு ஐகோர்ட் விதித்த நிபந்தனைகள் என்ன?
சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, முன்ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் விபரம் வெளியாகி உள்ளது.
சட்டசபையில் ஓட்டெடுப்பில், தங்கள் சொல்படி செயல்படுமாறு, தன்னிடம் ஒரு சிலர் பேரம் பேசியதாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., இளையராஜா புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர், முன்ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இருவருக்கும் நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
உத்தரவு விபரம்:
செந்தில் பாலாஜி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. வழக்கின் எப்.ஐ.ஆரில், சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளித்தால், 35 கோடி ரூபாய் வழங்குவதாக, எம்.எல்.ஏ.,விடம் பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், தற்போதைய அரசை கவிழ்க்க, எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே, இந்த வழக்கில் இருவரையும் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், நிபந்தனை முன்ஜாமின் வழங்குகிறேன்.
உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி, 25,000 ரூபாய்க்கான சொந்த ஜாமினும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமினும் செலுத்த வேண்டும்.
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, தினமும் காலை 10:30 மணி, மாலை 5:30 மணிக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
இருவரும் வழக்கு விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது. வழக்கு தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகளை கலைக்கக் கூடாது. நிபந்தனைகளை மீறினால் சட்டப்படியான நடவடிக்கைகளை விசாரணை நீதிமன்றம் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.