📅 Saturday, 11 July 2026 IST | ஆனி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology July 11, 2026 03:31 AM

மாணவிகளுக்கு வழிகாட்டிய ‘ஸ்டெம்’ விழா

மாணவிகளுக்கு வழிகாட்டிய ‘ஸ்டெம்’ விழா

இளம் பெண்கள், மாணவிகளை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், வழிகாட்டிகளுடன் இணைக்கும் நோக்கில் ‘ஸ்டெம் விழா’ நடைபெற்றது.

இத்துறைகளில் ஆர்வம் கொண்ட மாணவியருக்கு வளர்ந்துவரும் வாய்ப்புகள், தொழில்நுட்பம் அதிவேகமாக வளரும் உலகில் கற்றுக்கொள்ள வேண்டிய திறன்கள் ஆகியவை குறித்த புரிதலை நிகழ்ச்சி வழங்கியது.

‘ஸ்டெம்’ (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 30 பங்காளி அமைப்புகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன.

‘யுனைட்டெட் வுமன் சிங்கப்பூர்’ அமைப்பின் சார்பில் ஜூன் 27ஆம் தேதி மரீனா பே சேண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 1,000 பேர் பங்கேற்றனர்.

‘நாளையை, இன்றே வடிவமைப்போம்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாடு, சுகாதார அமைச்சுகளின் மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.

“செயற்கை நுண்ணறிவு மனிதத்திறனை மேம்படுத்தும் என்றால், அதில் பங்களிக்க அனைவருக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். திறன்கொண்டோரில் பாதிப் பேர் பின்தங்கிவிட்டால், அதிகத் திறன் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது. ஒவ்வோர் இளம் பெண்ணும் ‘ஸ்டெம்’ துறையில் தனக்கென ஓர் இடமுண்டு என்பதை உணரவேண்டும்,” என்றார் திரு டான்.

குறிப்பாக, பெண்கள் அதிகம் பங்கேற்காத துறைகளில், அவர்கள் ஈடுபட்டு உத்திபூர்வ சிந்தனையாளராக, படைப்பாளராக, சிக்கல்களுக்குத் தீர்வு காண்பவராக, தலைவராகத் திகழ வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

‘ஸ்டெம் துறைகளில் ஆர்வம் கொண்ட பெண்களுக்கான பயிலரங்குகளைத் தொடர்ந்து செய்து வந்தோம். அடுத்த கட்டமாக, ஒருமுறை மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகத் தொடங்கிய இவ்விழா, 2022 முதல் ஆண்டு விழாவாக மாறியுள்ளது. இவ்விழா, விழிப்புணர்வு, வழிகாட்டல், திறன் வளர்ச்சிக்கான தளமாக அமைந்துள்ளது,” என்றார் இவ்வமைப்பின் மூத்த திட்ட மேலாளர் அனுபமா கண்ணன்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“மாணவிகளுக்கு உயர்நிலைப் பள்ளிகளிலிருந்தே வாய்ப்புகளைத் தெரியப்படுத்துவதுடன் தேவையான திறன்கள் குறித்த சரியான தகவல்களையும் வழங்குகிறோம். இதில் பல்கலைக்கழகங்கள் உட்பட பல நிறுவனங்கள் பங்கேற்கின்றன,” என்றார் அவர்.

இவ்விழா இதுவரை 4,000க்கும் மேற்பட்ட மாணவிகளைச் சென்றடைந்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டாவது முறையாக இவ்விழாவில் பங்கேற்ற மாணவி ஸ்ரேயா சாத்தப்பன், 20, நிகழ்ச்சியில் வழிகாட்டிகளைச் சந்தித்ததுடன் அமைப்பின் வேறு சில திட்டங்கள் மூலம் பலனடைந்ததாகவும் கூறினார்.

“நான் வங்கி, நிதித் துறையில் பயில்கிறேன். ஆனாலும், அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பம் இன்றியமையாததாகியுள்ளது. இங்குக் கிடைக்கும் ஆலோசனைகள், கட்டமைக்கப்பட்ட பாதைகள் ஆகியவற்றால் எனக்குக் கூடுதல் தெளிவு கிடைத்தது,” என்றார் ஸ்ரேயா.

பல துறைகளிலும் பெண்கள், குறிப்பாக, இந்தியப் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்றால் இதுபோன்ற வாய்ப்புகளை மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.