லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்
லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் - எ.வ.வேலு
யாருக்கும் பயந்து ஓடி ஒளிய வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என எ.வ.வேலு தெரிவித்தார்.
Published : July 12, 2026 at 4:40 PM IST
சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்த திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை விமான நிலையத்தில் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 3ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியது. ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் இருதய சிகிச்சை பெற்று வந்ததால் அவர், லஞ்ச ஒழிப்புத் துறை முன் ஆஜராகவில்லை. மேலும், கால அவகாசம் கோரி எ.வ.வேலு சார்பில் அளிக்கப்பட்ட கடிதத்தை அவருடைய வழக்கறிஞர்கள் மருத்துவ சான்றுகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் கொடுத்தனர்.
இதற்கிடையே, கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், ஒரு முன்னாள் அமைச்சர் ஓடி ஒளிந்து விட்டார் என்றும், இன்னொருவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார் என்று விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து சென்னை வந்தடைந்த எ.வ.வேலு, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் கூறுகையில், "நான் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபத் மருத்துவமனையில் இதயம் தொடர்பான சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். கடந்த 2023-ஆம் ஆண்டிலும் அதே மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டேன்.
சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் உடல்நிலை பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்ல முடிவு செய்து கடந்த மாதம் 15-ஆம் தேதி விசாவுக்கு விண்ணப்பித்தேன். பின்னர், 17ஆம் தேதி விசா கிடைத்ததும், 25ஆம் தேதி சிங்கப்பூர் செல்ல இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தேன்.
ஆனால் 25-ஆம் தேதி காலை, என் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளித்தேன். அன்றைய பயணத்தை ரத்து செய்து விட்டு, மறுநாள் 26-ஆம் தேதி சிங்கப்பூர் சென்றேன். அங்கு இதயம், நரம்பியல், வயிறு மற்றும் ஒவ்வாமை தொடர்பான பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற்றேன். ஒவ்வாமை சிகிச்சைக்காக பல நாட்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் சிகிச்சை பெற்றதற்கான அனைத்து மருத்துவ ஆவணங்களும் மருத்துவர்களின் அறிக்கைகளும் என்னிடம் உள்ளன.
சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனையில் இருந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியதாக தகவல் கிடைத்தது. உடனடியாக வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பி, மருத்துவ பரிசோதனையில் இருப்பதால் 10 நாட்கள் அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். பின்னர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதும் மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு எந்த தேதியில் அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தேன்.
ஆனால், என்னைப் பார்த்து ஓடுகிறார்கள், பதுங்குகிறார்கள் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையுமில்லை. நான் மருத்துவ சிகிச்சைக்காகத்தான் சிங்கப்பூர் சென்றேன். யாருக்கும் பயந்து செல்லவில்லை; சுற்றுலாவுக்காகவோ வேறு எந்த காரணத்திற்காகவோ செல்லவில்லை. இதற்கு முன்பு, கடந்த 2016, 2023 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அதற்குரிய அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து குறிவைக்கப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு, "என்னை தனிப்பட்ட முறையில் குறிவைக்க வேண்டிய அவசியம் இல்லை. திமுக சட்டப்பேரவை கொறடாவாக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை நியமித்துள்ளார். சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் சார்பில் அரசிடம் கேள்வி எழுப்புவதும், கருத்து தெரிவிப்பதும் எனது கடமை. அந்த கடமையைத்தான் செய்து வருகிறேன். அது சிலருக்கு பிடிக்கிறதா, பிடிக்கவில்லையா என்பது வேறு விஷயம்" என்று பதில் அளித்தார்.
ஜூலை 15-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகிவீர்களா என்ற கேள்விக்கு, "நிச்சயம் ஆஜராவேன். ஜூலை 12ஆம் தேதிக்குப் பிறகு எந்த தேதியில் அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் அதன் விவரங்கள் குறித்து மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நான் எந்த தவறும் செய்யவில்லை. நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று எ.வ.வேலு பதில் அளித்தார்.