குதிரை பேரம் சர்ச்சை: கவர்னரிடம் இன்று திமுக மீண்டும் புகார்
- நமது நிருபர் -
குதிரை பேரம் விவகாரத்தில், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரிடம், தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, இன்று மீண்டும் புகார் மனு அளிக்க உள்ளார்.
முதல்வர் விஜய் மீது, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள் குதிரை பேர குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.
கடந்த 1ம் தேதி, கவர்னரை சந்தித்த தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி, 'முதல்வர் விஜய் குதிரை பேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.
'அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்' என, புகார் மனு அளித்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்திருந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர், கடந்த 2ம் தேதி தங்கள் ஆதரவாளர் கள் 10,000 பேருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் பேசுகையில், 'நாங்களாக வரவில்லை. த,வெ.க., அரசு எங்களை அணுகியது. அது பிடித்திருந்தது. அதனால் த.வெ.க.,வில் இணைந்தோம்' என்றார்.
அதாவது, த.வெ.க., தங்களை அணுகியதாக, எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியதை மையமாக வைத்து, இன்று கவர்னரிடம் ஆர்.எஸ்.பாரதி மற்றொரு புகார் மனுவை வழங்க முடிவு செய்துள்ளார்.