எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தவர்கள் மீது விசாரணை தேவை
எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தவர்கள் மீது விசாரணை தேவை - ஆளுநரிடம் வலியுறுத்திய கிருஷணசாமி
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
Published : July 12, 2026 at 9:05 PM IST
சென்னை: எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இன்று (ஜூலை 12) தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, குதிரை பேரம் மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ராஜினாமா செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி ஆளுநரிடம் கிருஷ்ணசாமி மனு அளித்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி, "தமிழக வெற்றிக் கழகம், எந்த கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டதோ, அந்த கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களையே ஒவ்வொருவராக ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைக்கும் வேலையைச் செய்து வருகிறது. கட்சித் தாவல் தடைச் சட்டம் இருக்கிறது.
ஒரு கட்சியில் வெற்றி பெற்றவர்கள் மூன்றில் ஒரு பங்கு சென்றால் அது கட்சி தாவலில் வராது. கட்சித் தாவல் தடைச் சட்டம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், கட்சித்தாவல் தடை சட்டத்தை தவிர்ப்பதற்காகவும் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருகின்றனர். ஆட்சி அமைப்பதற்கோ, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கோ, வேறொரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் கட்சிக்கு எடுத்தால், அது குதிரை பேரம் என்று பொருள்.
குதிரை பேரத்தை வித்தியாசமாக செய்கிறார்கள். இது குதிரை பேரம் தான், எக்காரணம் கொண்டும் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு உடனே இடைத்தேர்தல் நடத்தக்கூடாது. ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்மன் அனுப்புங்கள்; அவர்களை தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும், தவெகவில் இருந்து ஆசைவார்த்தைக் கூறி தான் அவர்கள் அங்கு சென்றுள்ளனர். ஒவ்வொரு நாளும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வந்தால் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடத்தும் பணி தான் நடைபெறும்.
இது பற்றி ஆளுநராக நான் என்ன நடவடிக்கை எடுக்க முடியம் என அவர் கூறியபோது, இது பற்றி மத்திய உள்துறைக்கு நீங்கள் தகவல் அனுப்ப வேண்டும்; இதுபோன்ற ராஜினாமா செய்வதை அனுமதித்தால் கட்சித் தாவல் தடை சட்டமே நீர்த்துப் போகும் என கூறினேன். அதிகாரம் இல்லாதவர்கள் தற்போது அமைச்சரவையில் இடம் பெறுகிறார்கள்; சட்டப்பேரவைகள் வருகின்றனர், ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணுரெட்டி போன்றவர்களின் நியமனம் குறித்தும் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம்.
ஏழு கோரிக்கைகள் குறித்து மனு அளித்துள்ளேன். மேலும் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தவர்கள், சொந்த விருப்பத்தில் ராஜினாமா செய்யவில்லை. ஆதாயத்திற்கு தான் ராஜினாமா செய்துள்ளனர். அதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது. அவர்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்ய தூண்டப்பட்டுள்ளனர். ஊழலை ஒழிப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்துள்ள தவெக, இன்று ஊழல் பெருச்சாளிகளைத் தேடி தேடி தவெகவிற்கு இழுக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.