📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News July 13, 2026 12:34 PM

மீண்டும் விம்பிள்டன் ராஜா.. ஸ்வெரவ்வை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து சின்னர் சாதனை

மீண்டும் விம்பிள்டன் ராஜா.. ஸ்வெரவ்வை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து சின்னர் சாதனை

மீண்டும் விம்பிள்டன் ராஜா.. ஸ்வெரவ்வை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து சின்னர் சாதனை

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்வை வீழ்த்தி, இத்தாலியின் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டி 3 மணி 46 நிமிடங்கள் வரை நீடித்தது. சுமார் 4 செட்கள் வரை போட்டி சென்றது. ஆரம்பம் முதலே அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெரவ் முதல் செட்டை டை-பிரேக்கரில் 7-6 (7) என்ற கணக்கில் கைப்பற்றினார். எனினும், உடனடியாக சுதாரித்துக் கொண்ட சின்னர் 2வது செட்டை டை-பிரேக்கரில் 7-6 (2) என வென்று பதிலடி கொடுத்தார்.

போட்டியின் 3வது செட்டில் ஸ்வெரவ் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து வலது முழங்காலில் காயமடைந்தார். இந்த தருணத்தை சாதகமாக பயன்படுத்திய சின்னர், ஆட்டத்தின் முதல் பிரேக் பாயிண்ட்டைப் பெற்று 3வது செட்டை 6-3 எனக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற 4வது செட்டிலும் அபாரமாக விளையாடிய சின்னர் 6-4 என்ற கணக்கில் வென்று பட்டத்தை கைப்பற்றினார். வெற்றி பெற்ற உடன் விம்பிள்டன் புல்வெளி மைதானத்தில் படுத்துத் தனது வெற்றிக் கொண்டாட்டத்தைத் தழுவினார். இறுதியில் சின்னர் 6-7, 7-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மகுடம் சூடினார்.

இதன் மூலம் தனது 5வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் சின்னர். மேலும், பீட் சாம்ப்ராஸ், ஃபெடரர், ஜோகோவிச்சிற்குப் பிறகு விம்பிள்டன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்ட ஓபன் எராவின் 4வது வீரர் என்ற அரிய சாதனையையும் படைத்தார். இது மட்டுமின்றி ஸ்வெரவ்வுக்கு எதிராக தொடர்ந்து 10வது முறையாக சின்னர் வென்றுள்ளார். இது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவரது 100வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.