கலந்துரையாடல், காணொளி ஆய்வு, பரிசு மழையுடன் களைகட்டிய ‘காற்பந்து கலாட்டா’
தமிழ் முரசின் ‘காற்பந்து கலாட்டா’ வலையொளியின் நான்காவது பாகம் திங்கட்கிழமை (ஜூலை 13) யூடியூப் தளத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், அதைப் பற்றியும் இனி வரவிருக்கும் அரையிறுதிச் சுற்றைப் பற்றியும் வலையொளியில் விரிவாகப் பேசப்பட்டது.
பிரான்ஸ்-மொரோக்கோ, ஸ்பெயின்-பெல்ஜியம், நார்வே-இங்கிலாந்து, அர்ஜென்டினா-சுவிட்சர்லாந்து ஆகிய ஆட்டங்கள் தொடர்பாகப் பலர் அறிந்துகொள்ள ஆவலுடன் இருக்கும் தகவல்கள் வலையொளியில் இடம்பெற்றுள்ளன.
பார்ப்போரைத் திணறடித்த கடும் போட்டி, விரக்தியில் ஆழ்த்திய சர்ச்சைகள், பிரமிக்க வைத்த அபார கோல்கள் ஆகியவை பற்றி பேசப்பட்டது மட்டுமல்லாது, காணொளிக் காட்சிகள் மூலமாகவும் அவை ஆராயப்பட்டன. நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக ரசிகர்களுக்கான போட்டியின் முடிவுகள் வெளியிடப்பட்டன. காலிறுதியில் களமிறங்கிய எட்டு குழுக்களில் அரையிறுதிக்குத் தகுதி பெறும் நான்கு குழுக்களை ஊகிப்பதே போட்டி.
போட்டியில் பலர் பங்கெடுத்து நல்லாதரவு வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் தமிழ் முரசு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
போட்டியில் பங்கெடுத்தோரில் 20 பேர் நான்கு குழுக்களைச் சரியாக ஊகித்தனர். மூவருக்கு மட்டுமே பரிசு என்பதால் வலையொளியின்போது, அதைக் காண்போர் கண் முன்னே மின்னிலக்க முறைப்படி குலுக்கல் நடத்தப்பட்டது.
அதில் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா $50 பெறுமானமுள்ள ‘டெக்கெத்லான்’ பற்று அட்டை வழங்கப்படுகிறது. வெற்றியாளர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள வலையொளியைக் கண்டு களியுங்கள்.
பரிசு பெறாதவர்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம். அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது. அரையிறுதியில் போட்டியிடும் நான்கு குழுக்களில் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெறும் இரண்டு குழுக்களைச் சரியாக ஊகிக்கும் மூவருக்குத் தலா $75 பெறுமானமுள்ள ‘டெக்கெத்லான்’ பற்று அட்டை வழங்கப்படும்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
https://tinyurl.com/TM-FifaWC2026 எனும் இணைய இணைப்பு மூலம் சென்று அதில் உள்ள படிவத்தில் உங்கள் விடைகளைப் பதிவு செய்து சமர்ப்பிக்கவும். விடைகளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) இரவு 9 மணிக்குள் சமர்ப்பித்துவிடவும்.
‘காற்பந்து கலாட்டா’வின் அடுத்த பாகம் வரும் வியாழக்கிழமை (ஜூலை 16) வெளியிடப்படும். அதில் இப்போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும் இறுதி ஆட்டம் குறித்தும் அலசி ஆராயப்படும்.