இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வாய்ப்பு
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வாய்ப்பு
லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய பயிற்சியாளரான பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகி, ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான பயிற்சியாளராக முழுமையாக கவனம் செலுத்த உள்ளதால், இந்த இடத்திற்கு டிராவிட் பெயர் பரிசீலனையில் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலத்தில், இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன், 2024 டி20 உலகக் கோப்பையையும் வென்று வரலாற்று சாதனை படைத்தது. முழுநேர பயிற்சியாளர் பணியில் ஈடுபட டிராவிட்டிற்கு விருப்பம் இல்லை என்றாலும், டெஸ்ட் அணிக்கு மட்டும் பயிற்சியாளராக செயல்படுவது அவர் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பளிக்கும் என்பதால், அவர் இந்த வாய்ப்பை பரிசீலிக்கலாம் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
டிராவிட் தவிர, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டரான ஆண்டி பிளவர் பெயரும் உள்ளது. தற்போது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளராக இருக்கும் பிளவர், இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டாலும் அவரது ஐபிஎல் பணியைத் தொடர இங்கிலாந்து மகிரிக்கெட் வாரியம் அனுமதிக்கும் எனத் தெரிகிறது.
ஐபிஎல் போன்ற டி20 லீக்குகளில் பணியாற்றும் பயிற்சியாளர்களை நியமிக்க ECB தயாராக இருப்பது இதற்கு முக்கிய காரணமாகும். ஆண்டி பிளவர் இதற்கு முன்னரும் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி, மூன்று ஆஷஸ் தொடர் வெற்றிகளையும், டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணியை முதலிடத்திற்கும் கொண்டு சென்ற அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தவிர, கிளாமோர்கன் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிச்சர்ட் டாசன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா, இங்கிலாந்து லயன்ஸ் பயிற்சியாளர் ஆண்ட்ரூ பிளிண்டாஃப், மைக் ஹெசன் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோரின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.