ஓயாத 'வார்' சண்டை: உலக கோப்பை கால்பந்தில்
மயாமி: உலக கோப்பை தொடரில் 'வார்' தொழில்நுட்ப குழுவின் முடிவுகள் சர்ச்சையை கிளப்புகின்றன. 'ரவுண்ட்-16' சுற்றில் எகிப்து அணி வீரர் ஜிகோ அடித்த கோல் நிராகரிக்கப்பட்டது, காலிறுதியில் சுவிட்சர்லாந்து வீரருக்கு 'ரெட் கார்டு' காண்பித்தது என பல அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கிரிக்கெட்டில் அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் 'டி.ஆர்.எஸ்.,' முறையைவிட 'வார்' மோசமாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.
கால்பந்து போட்டிகளில் 'ஆப்-சைடு', வீரர்கள் செய்யும் தவறுகளை கண்டறிய 'வார்' (வீடியோ அசிஸ்டென்ட் ரெப்ரி) தொழில்நுட்பம் 2018ல் அறிமுகமானது. 48 'கேமரா' மூலம் 'அல்ட்ரா ஸ்லோ மோஷனில்' போட்டியின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக பார்க்கலாம். கள நடுவருக்கு அல்லது 'வார்' குழு நடுவருக்கு சந்தேகம் எழுந்தால், மானிட்டரில் 'ரீப்ளே' பார்ப்பர். இதில் தவறு உறுதியானால், நடுவரின் முடிவு மாற்றப்படும்.
மாறிய 'மஞ்சள் அட்டை' : காலிறுதியின், 72வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் எம்போலோவை கீழே தள்ளிவிட்டதாக கருதி, அர்ஜென்டினாவின் பரேடெசிற்கு நடுவர் அவசரப்பட்டு 'மஞ்சள் அட்டை' காண்பித்தார். பின் 'வார்' தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்தனர். அதில் எம்போலோ வேண்டுமென்றே கீழே விழுந்து, காயம் அடைந்தது போல நடித்தது தெரிய வந்தது. உடனே பரேடெசிற்கு பதிலாக எம்போலோவுக்கு 'மஞ்சள் அட்டை' காண்பித்தார். ஏற்கனவே ஒரு 'மஞ்சள் அட்டை' பெற்றிருந்த எம்போலோ, இரு 'மஞ்சள் அட்டை' காரணமாக, 'ரெட் கார்டு' பெற்று கண்ணீருடன் வெளியேறினார். 'தவறான வீரர் அடையாளம்' என்ற விதிப்படி, வார் குழுவினர் முடிவை மாற்றினர். இது, சுவிட்சர்லாந்துக்கு பேரிடியாக அமைந்தது. 10 வீரர்களுடன் விளையாட நேர்ந்ததால், தோற்று வெளியேறியது.
சுவிட்சர்லாந்து பயிற்சியாளர் முராத் யாகின் கூறுகையில்,''எம்போலோ தவறு செய்யவில்லை. 'வார்' தலையிட்டு, இஷ்டம் போல 'எல்லோ கார்டு' கொடுக்கின்றனர். நாங்கள் வெளியேற்றப்பட்ட விதம் வேதனை அளிக்கிறது,''என்றார்.
சுவிட்சர்லாந்து கேப்டன் கிரானிட் கூறுகையில்,''ஒரு 'ரெட் கார்டு' போட்டியின் போக்கை மாற்றியது. இதை ஏற்பது கடினம்,''என்றார்.
அர்ஜென்டினா பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி கூறுகையில்,''சுவிட்சர்லாந்து அணியின் ஒரு வீரர் வெளியேற்றப்பட்டது எங்களது அதிர்ஷ்டம்,''என்றார்.
'வயர்' மீது பந்து
மற்றொரு காலிறுதியில் நார்வே கோல்கீப்பர் ஓர்ஜன் நைலாண்ட், 'கோல்-கிக்' செய்தார். மேலே பறந்த பந்து, 'ஸ்பைடர் கேமரா'வின் கேபிள் வயர் மீது பட்டது போல தெரிந்தது. இது போன்ற சமயத்தில் ஆட்டத்தை நிறுத்த வேண்டும். ஆனால், பந்தை பெற்ற இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்காம் கோல் அடித்தார். கேபிள் வயர் மீது பந்து பட்டதா என்பதை 'வார்' குழுவினர் ஆய்வு செய்யவில்லை. 'பந்தில் உள்ள சென்சார், எந்த பொருளின் மீதும் படவில்லை என்பதை உறுதி செய்தது' பிபா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 55வது நிமிடத்தில் நார்வேயின் டார்பஜார்ன் அடித்த கோல் 'வார்' குழுவினரால் நிராகிரிக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதே போல போஸ்னியாவின் தற்காப்பு வீரர் தாரிக்கின் வலது கணுக்காலில் உதைத்த அமெரிக்க வீரர் பாலோகனுக்கு 'வார்' குழு கொடுத்த 'ரெட் கார்டு' அதிர்ச்சி அளித்தது. பின் அதிபர் டிரம்ப் தலையிட்டதால் பாலோகனுக்கு விதிக்கப்பட்ட ஒரு போட்டி தடை ரத்தானது.
'ரவுண்ட்-16' போட்டியில் அர்ஜென்டினாவுக்கு எதிராக எகிப்து வீரர் ஜிகோ அருமையான கோல் அடித்தார். ஆனால் கோல் அடிப்பதற்கு முன் எகிப்து தற்காப்பு வீரர் மர்வான் அட்டியா, அர்ஜென்டினாவின் லிசாண்ட்ரோ மார்டினசை தவறாக தடுத்ததாக கூறி, வார் குழுவினரால் ஜிகோவின் கோல் நிராகரிக்கப்பட்டது. இது, எகிப்து அணியின் தோல்விக்கு வித்திட்டது.
கால்பந்து போட்டியில் ஏற்படும் தவறுகளை சரிய செய்ய கொண்டு வந்த 'வார்' தொழில்நுட்பம், பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. இதை தவிர்க்க 'வார்' குழுவின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்; சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.