📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 13, 2026 06:31 PM

சமூகப் பராமரிப்பு வீடுகள் வாங்குவோருக்கான தகுதி வயது 55ஆகக் குறைப்பு

சமூகப் பராமரிப்பு வீடுகள் வாங்குவோருக்கான தகுதி வயது 55ஆகக் குறைப்பு

சமூகப் பராமரிப்பு வீடுகளை வாங்குவோருக்கான தகுதி வயது 65ல் இருந்து 55ஆகக் குறைக்கப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகள் விற்பனைக்கு விடப்படும்போது இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும்.

இத்திட்டத்தில் உள்ள சமூகப் பராமரிப்பு வீடுகளுக்கு 55 வயதும் அதற்கும் அதிகமான வயதுடையவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர் எளிதில் செல்லக்கூடிய குளியலறைகள் மற்றும் இதர சுகாதார, சமூகச் சேவைகளைக் கொண்ட இந்த அடுக்குமாடி வீடுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி வயது தற்போது 65ஆக உள்ளது.

குடியிருப்பாளர்கள் பெறவேண்டிய அடிப்படைச் சேவைத் தொகுப்புத் திட்டத்துக்கான கட்டணம் 18 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடு குறைக்கப்படுகிறது.

இத்தொகுப்புத் திட்டத்தில் பராமரிப்பு, ஆதரவுச் சேவைகளும் அடங்கும்.

முதியோருக்கான வீடமைப்பு, பராமரிப்புத் தெரிவுகளை விரிவுபடுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் அமைவதாக சுகாதார அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஆகியவை திங்கட்கிழமையன்று (ஜூலை 13) கூட்டறிக்கை வெளியிட்டன.

தங்களுக்கு ஏற்புடைய வீடுகளுக்கு மாற விரும்பும் மூத்தோருக்குக் கூடுதல் வீடமைப்புத் தெரிவுகள் வழங்கப்படும். குறைந்த குத்தகைக்காலத்தைக் கொண்ட ஈரறை வீடுகள், சமூகப் பராமரிப்பு வீடுகள் ஆகியவை இவற்றில் அடங்கும்.

விற்பனை ஆகாமல் மீதமுள்ள பிடிஓ வீடுகள் திட்டத்தில் உள்ள சமூகப் பராமரிப்பு வீடுகளை வாங்குவதற்கான தகுதி வயதும் 55ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தங்கள் வீடு பற்றி முடிவெடுக்க மூத்தோருக்குக் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அக்டோபர் மாதத்தில் கெல்டிகாட் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில், தோ பாயோ வட்டாரத்தில் கட்டப்படும் பிடிஓ குடியிருப்பில் ஏறத்தாழ 260 சமூகப் பராமரிப்பு வீடுகள் கட்டப்படும்.

சமூகப் பராமரிப்பு வீடுகள் அடங்கிய பிடிஓ குடியிருப்புகளை இதுவரை புக்கிட் பாத்தோக், குவீன்ஸ்டவுன், பிடோக், கேலாங், செங்காங் ஆகிய ஐந்து வட்டாரங்களில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கட்டியுள்ளது.

சமூகப் பராமரிப்பு வீடுகளுக்கான சேவைகள் நெறிமுறைப்படுத்தப்படும் என்றும் அதற்கான அடிப்படைச் சேவைத் தொகுப்புத் திட்டம் ஏற்புடைய விலையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தேசிய நீண்டகாலப் பராமரிப்புத் திட்டத்தின்கீழ் மானியம் வழங்கப்படும் பிரிவுகளுக்குச் சமமாக அடிப்படைச் சேவைத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் இருக்கும் பிரிவுகளுக்கான கட்டணங்களுக்கும் மானியம் வழங்கப்படும்.

அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமானதாக இருக்கும் நடவடிக்கைகளில் குறைந்தது ஒரு நடவடிக்கையைச் செய்ய முடியாதவர்கள் இந்த மானியத்துக்குத் தகுதி பெறுவர்.

2026ஆம் ஆண்டுக்கு முன்பு விற்கப்பட்ட சமூகப் பராமரிப்பு வீடுகளின் குடியிருப்பாளர்களுக்கான மாதாந்தர அடிப்படைச் சேவைத் தொகுப்புத் திட்டக் கட்டணங்கள் குறையும் என்று சுகாதார அமைச்சு கூறியது.