2031
2031-இல் ஆட்சி மாற்றம் உறுதி; அண்ணாமலை பேச்சு
தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் அகற்றினால், சமூகத்தில் இருக்கும் குற்றங்கள் பெருமளவு குறையும் என அண்ணாமலை தெரிவித்தார்.
Published : July 12, 2026 at 10:28 PM IST
Updated : July 12, 2026 at 10:37 PM IST
கோவை: 2031-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மிகப் பெரிய ஆட்சி மாற்றம் நடைபெறும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜக-வில் இருந்து விலகிய அண்ணாமலை 'வி த லீடர்ஸ்' (We The Leader) என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். இதன் முதல் கூட்டம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 'போதை விழிப்புணர்வு மாநாடு' என்கிற பெயரில் இன்று (ஜூலை 12) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "வீ த லீடர், இது ஒரு அரசியல் இயக்கம். சமுதாயத்தில் இருக்கக்கூடிய பிரச்சனையை கண்டுபிடித்து, அதற்கான தீர்வை அரசு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நானே ஒரு தனி மனிதனாக அந்த தீர்வில் பங்கெடுப்பேன், பாடுபடுவேன் என்கின்ற எண்ணத்தை விதைக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு.
இதுவரை இந்த இயக்கத்தில் 19 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்திருக்கிறார்கள். இதில் 17 சதவீதம் பெண்கள். இது நம்முடைய முதல் வெற்றி. இது என்னுடைய குடும்ப கட்சி கிடையாது, குடும்பத்திற்கு சொந்தமானதும் அல்ல. இது உங்களுக்கு சொந்தமானது. இந்த அமைப்பை பொறுத்தவரை நானும் ஒரு தன்னார்வளர் தான்.
இந்த மாதம் முழுவதும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு 'வீ த லீடர்' சார்பில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுக்க உள்ளோம். 50 லட்சம் மரம் தமிழ்நாடு முழுவதும் நட உள்ளோம். இதையடுத்து, ஏரி, குளம் மற்றும் நதி நீர்நிலைகளை சுத்தம் செய்ய உள்ளோம். அத்துடன், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் நாம் விழிப்புணர்வு செய்ய உள்ளோம்.
நம்முடைய இயக்கத்தில் நல்லவர்கள் பணி செய்ய வேண்டும் என இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். 2026 இல் தமிழகத்தில் ஒரு ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தினார்கள். 2031-இல் மற்றுமொரு மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்துவார்கள்.
தமிழகத்தில் 18 வயதில் இருந்து 70 வயது வரையிலான பலர் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். குறிப்பாக ஒவ்வொரு குற்றச் சம்பவங்களுக்கும் பின்னாலும் போதை உள்ளது. ஒரு வீட்டில் பெண்ணுக்கு ஒரு கொடுமை என்றால் அங்கேயும் போதைப்பழக்கம் உள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 5,500 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. இந்த அரக்கனை ஒழிக்க வேண்டும்.
1 கோடியே 68 லட்சம் பேர் ஓட்டு போட்டு தவெக கட்சியை மக்கள் ஆதரித்துள்ளார். இதற்கு மரியாதை கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை. தட்டு தடுமாறி அரசியலுக்கு வந்து, இன்னைக்கு எம்எல்ஏவாக பலர் உள்ளார்கள். மேலும், தவெகவில் உள்ள பலர் முதல் முறையாக அமைச்சராகி உள்ளார்கள். செங்கோட்டையனை தவிர எல்லோரும் புதிது. இவர்கள் அனைவரும் முதலில் தடுமாற செய்வார்கள். அப்போது அவர்களை நாம் அனைவரும் இணைந்து தூக்கி பிடித்து விட வேண்டும். இதுதான் ஒரு நல்ல சமுதாயம்" எனத் தெரிவித்தார்.