📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion July 13, 2026 02:34 AM

அமர்நாத் குகை கோவில் பனி லிங்கம் உருகியது; பக்தர்கள் அதிர்ச்சி

அமர்நாத் குகை கோவில் பனி லிங்கம் உருகியது; பக்தர்கள் அதிர்ச்சி

இமயமலையில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற அமர்நாத் குகை கோவிலில், நடப்பு ஆண்டுக்கான புனித யாத்திரை கடந்த ஜூலை 3-ந் தேதி பக்திப் பரவசத்துடன் தொடங்கியது. யாத்திரை தொடங்கிய முதல் நாளில், சுமார் 5 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளித்த இயற்கை பனிலிங்கம், தற்போது ஒரே வாரத்திற்குள் 90 சதவீதம் வரை உருகி மறைந்துள்ளது. இதனால் தரிசனத்திற்காக பல மைல் தூரம் கடந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

7 அடியில் இருந்து சுருங்கியது

முன்னதாக, கடந்த மே மாதம் 23-ந் தேதி எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் வெளியிட்ட புகைப்படத்தில், இந்த பனிலிங்கம் சுமார் 7 அடி உயரத்திற்கு பிரம்மாண்டமாக காட்சியளித்தது. ஆனால், அதன் பிறகு பனி வேகமாக உருக தொடங்கியது. யாத்திரை தொடக்க நாளில் 5 அடியாக குறைந்த பனிலிங்கம், தற்போது குகைக்குள் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மிக சிறிய அளவாக சுருங்கி போய்விட்டது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலையுடன் கூறியதாவது:-

அதிவேகமாக உருகுவது ஏன்?

கடந்த 2004, 2006, 2016 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளிலும் இதுபோன்று பனிலிங்கம் முன்கூட்டியே உருகி இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை விட மிக அதிவேகமாக உருகியிருக்கிறது. இதற்கு உலகளாவிய பருவநிலை மாற்றமே மிக முக்கிய காரணமாகும்.மலை பகுதிகளில் மரங்களை வெட்டுவது, குப்பைகளை குவிப்பது போன்ற மனித தவறுகளால் இமயமலை பகுதியின் வெப்பம் உயர்ந்துள்ளது.

யாத்திரை தொடங்கிய ஒரே வாரத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குகைக்குள் சென்று வந்துள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குகைக்குள் கூடுவதால் ஏற்படும் உடல் வெப்பமும், அங்குள்ள மைக்ரோ-கிளைமேட்டை மாற்றி வெப்ப காற்றை உருவாக்குகிறது. இதனால் குகையின் மேலிருந்து வடியும் நீர்த்துளிகள் குறைந்து, பனிலிங்கம் வேகமாக உருகி வருகிறது."

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.