📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion July 12, 2026 04:15 PM

தமிழ் கடவுள் முருகனை சுற்றும் சூழ்ச்சிகள்...வெற்றிமாறன் பட அறிவிப்பு

தமிழ் கடவுள் முருகனை சுற்றும் சூழ்ச்சிகள்...வெற்றிமாறன் பட அறிவிப்பு

தமிழ் கடவுள் முருகனை சுற்றும் சூழ்ச்சிகள்...வெற்றிமாறன் பட அறிவிப்பு ஏன் முக்கியமானது?

தமிழ் கடவுள் முருகனை வடமொழிக் கடவுளாக உருவகிக்கும் அரசியல் போக்கு தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில் வெற்றிமாறனின் தமிழ் முருகன் திரைப்பட அறிவிப்பு முக்கியமான அரசியல் பிரகடனமாக பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக முருகனை மையமாகக் கொண்ட அரசியல், பண்பாட்டு மற்றும் திரையுலக விவாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக திருப்பரங்குன்றம் தொடர்பான சர்ச்சைகள், முருக வழிபாட்டின் வரலாறு குறித்த விவாதங்கள், அதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் ஜூனியர் என்.டி.ஆர். முருகன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல்கள் ஆகியவை முருகனைச் சுற்றிய விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்தச் சூழலில் இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் கூட்டணியில் 'தமிழ் முருகன்' என்ற புதிய திரைப்படம் உருவாக இருப்பதாக வெளியான தகவல் தமிழ் திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படம் கவிஞர் அறிவுமதியின் முருகன் தொடர்பான நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

வெற்றிமாறனின் தமிழ் முருகன் அறிவிப்பு ஏன் முக்கியமானது

இயக்குநர் வெற்றிமாறன் தனது திரைப்படங்களில் சமூக நீதி, சாதி, நிலம், மொழி, அடையாளம் போன்ற கருத்துகளை தொடர்ந்து பேசிவரும் படைப்பாளியாக அறியப்படுகிறார். விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட அவரது படங்களில் அதிகார அமைப்புகள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மற்றும் தமிழ் மண்ணின் அரசியல் ஆகியவை முக்கியமாக இடம்பெற்றுள்ளன. இதனால் அவரது புதிய திரைப்பட அறிவிப்பும் வெறும் புராணப் படமாக இல்லாமல், தமிழர் பண்பாட்டு அடையாளத்தை மையமாகக் கொண்ட படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதற்கு முன்பாக நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டிருந்தார். ஜல்லிக்கட்டு, கிராமிய வாழ்வியல் மற்றும் தமிழர் மரபை மையமாகக் கொண்ட அந்தத் திரைப்படமும் தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தும் படைப்பாகவே பார்க்கப்பட்டது. அந்தப் படம் இன்னும் முழுமையாக உருவாகாத நிலையில், தற்போது தமிழ் முருகன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முருகன் வடமொழி கடவுளா ?

முருகன் குறித்து பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆய்வாளர்கள் வெவ்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். சிலர் முருகனை தொன்மையான தமிழர் தெய்வமாகக் கருதினாலும், மற்றவர்கள் இந்திய இந்து சமய மரபின் பரந்த கடவுள் வழிபாட்டு மரபின் ஒரு பகுதியாகவே விளக்குகின்றனர். இந்த விவாதங்கள் சமூக வலைதளங்களிலும் அரசியல் அரங்குகளிலும் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.

அத்தகைய சூழ்நிலையில்தான் தமிழ் முருகன் திரைப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது வெறும் திரைப்பட அறிவிப்பாக மட்டுமல்லாமல், தமிழ் பண்பாட்டு அடையாளம், முருக வழிபாட்டின் வரலாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சமகால அரசியல் விவாதங்களையும் மீண்டும் முன்னிறுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதன் கதை, திரைக்கதை மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் போது, இந்தத் திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவிலும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி